குளங்களில் இருந்து அனுமதியின்றி மண் அள்ளினால் ரூ.25 ஆயிரம் அபராதம்: கலெக்டர் உத்தரவு

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குளங்களில் இருந்து அனுமதியின்றி மண் அள்ளினால் ரூ.25 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும் என்று கலெக்டர் டி.ஜி.வினய் கூறியுள்ளார்.

Update: 2018-05-06 22:30 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இதில் சுமார் 1,800 குளங்களில் இருந்து இலவசமாக மண் அள்ள விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட குளங்களில் இருந்து அந்தந்த பகுதி விவசாயிகள் மண் அள்ளிக்கொள்ளலாம். அதிகபட்சமாக ஒரு விவசாயி டிராக்டரில் 25 லோடு அல்லது டிப்பர் லாரி என்றால் 13 லோடு வரை மண் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் ஒரு விவசாயிக்கு மண் அள்ள அனுமதி கிடையாது.

விவசாய தேவைக்கு தான் மண் அள்ளி செல்கின்றனரா? என்று சோதனை செய்ய அந்தந்த தாசில்தார் தலைமையில் தனிக்குழு அமைத்து கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவிட்டுள்ளார். முறையான அனுமதியின்றியும், வர்த்தக தேவைக்காகவும் மண் அள்ளி செல்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்து, ரூ.25 ஆயிரம் அபராதமாக விதிக்க அறிவுறுத்தியுள்ளார். அதன்படி வருவாய்த்துறையினர் அவ்வப்போது வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. மேலும் இலவசமாக மண் அள்ள அனுமதி கேட்டு யாரை தொடர்புகொள்வது? என்று அவர்களுக்கு தெரிவதில்லை. ஒரு சில விவசாயிகளே குளங்களில் இருந்து இலவசமாக மண் அள்ளிச்செல்கின்றனர். இதுகுறித்து வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, அந்தந்த வட்டாரங்களில் அதிகாரிகள் மூலம் துண்டுபிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அதில் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் மற்றும் அதிகாரிகளின் செல்போன் எண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், துண்டு பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்புகொண்டு பயன்பெறலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்