புதுவையில் பயங்கரம்: காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக் கொலை

புதுவையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் காங்கிரஸ் பிரமுகரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியது.;

Update: 2018-05-06 23:30 GMT
புதுச்சேரி,

புதுவை குருசுக்குப்பம் மரவாடி தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 46). காங்கிரஸ் மீனவர் அணி செயலாளர். முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ.வின் தீவிர ஆதரவாளராகவும் இருந்து வந்தார்.

இவர் பெரிய மார்க்கெட்டில் மீன்களை ஏலம் எடுத்து அதை மற்றவர்களுக்கு பிரித்துக் கொடுத்து விற்பனை செய்து வந்தார். இதற்காக நாள்தோறும் அதிகாலை 4 மணி அளவில் அவர் பெரிய மார்க்கெட்டிற்கு வருவது வழக்கம்.

நேற்று அதிகாலை அவர் மோட்டார் சைக்கிளில் பெரிய மார்க்கெட்டிற்கு வந்த போது அவரை மோட்டார் சைக்கிளில் ஒரு கும்பல் பின்தொடர்ந்து வந்துள்ளது.

இதை தெரிந்து கொண்ட பாண்டியன் அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச் சென்றார். ஆனால் அதன்பிறகும் அந்த கும்பல் தொடர்ந்து விரட்டிச் சென்று ஆம்பூர் சாலை-செஞ்சிசாலை இடையில் உள்ள செட்டித்தெரு பாலத்தில் (மணக்குள விநாயகர் கோவில் தேர் நிறுத்தப்பட்டிருக்கும் இடம்) அவரை மடக்கிப் பிடித்து சரமாரியாக வெட்டியது.

இதில் பலத்த காயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது முகத்தை குறி வைத்து அந்த கும்பல் வெட்டி சிதைத்துள்ளது. அடையாளம் தெரியாத அளவுக்கு முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. இதனால் அவர் யார்? என்பது பற்றி நீண்டநேரமாக யாருக்கும் தெரியவில்லை. அதிகாலை 5 மணிக்குப் பிறகுதான் அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்தவர் யார்? என்பது குறித்து விசாரித்தபோது தான் பெரிய மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வரும் பாண்டியன் என்பது தெரியவந்தது.

இதுபற்றிய செய்தி பரவியதும் பெரிய மார்க்கெட் மீன் வியாபாரிகள், பெண்கள் அங்கு விரைந்து வந்தனர். உறவினர்களும் அங்கு விரைந்து வந்தனர். பாண்டியனின் பிணத்தை பார்த்து கதறி அழுதனர்.

கொலையாளிகளை கைது செய்யக்கோரி திடீர் என அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா ஆகியோரும் அங்கு வந்தனர்.

இதற்கிடையே முதல்- அமைச்சர் நாராயணசாமியும் அங்கு வந்தார். அவர் போலீசாரிடம் விவரத்தை கேட்டறிந்தார். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம், இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டனர்.

இதன்பிறகு போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாண்டியன் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொன்றவர்கள் யார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தனது குடும்பத்தினரிடம் பாண்டியன், கடந்த சில நாட்களாக தன்னை யாரோ பின் தொடர்ந்து வருவதாக தெரிவித்து வந்துள்ளார்? இதைக்கேட்டு விடிந்த பின் மார்க்கெட்டிற்கு செல்லுங்கள், அல்லது யாரையாவது துணைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று அறிவுறுத்தினர். ஆனால் அதை பாண்டியன் பொருட்படுத்தவில்லை என்று தெரிகிறது.

இந்த கொலை நடந்த சிறிது நேரத்தில் குருசுகுப்பத்தை சேர்ந்த ஒரு கும்பல் லோகு, ஏகநாதன் ஆகியோரது வீடுகளில் கல்வீசி தாக்கி உள்ளனர். இந்த கொலை சம்பவத்தால் குருசுகுப்பம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்