போலீஸ் விசாரணைக்கு பயந்து டி.வி. மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை

போலீஸ் விசாரணைக்கு பயந்து டி.வி. மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது நண்பரும் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-05-06 22:30 GMT
கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம் அம்பலவானேந்தல் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 47). டி.வி. மெக்கானிக். இவர் ஜெகதாப்பட்டினம் பகுதியில் டி.வி. பழுதுபார்க்கும் கடை வைத்து நடத்தி வந்தார். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த ஹைதர் அலிகான்(48). நேற்று முன்தினம் ஜெகதாப்பட்டினம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 5 கோழிகள் மற்றும் 4 புறாக்கள் திருட்டு போனது.

இதுகுறித்த புகாரின் பேரில் ஜெகதாப்பட்டினம் போலீசார் சந்தேகத்தின் பேரில் ஹைதர் அலிகானிடம் விசாரணை நடத்துவதற்காக போலீஸ் நிலையத்திற்கு வரச்சொல்லி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன ஹைதர் அலிகான் அதே பகுதியில் உள்ள ஒரு செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெகதாப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரை சமாதானப்படுத்தினர். இதனையடுத்து ஹைதர் அலிகான் செல்போன் கோபுரத்தில் இருந்து தானாகவே இறங்கி வந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டி.வி. மெக்கானிக் தற்கொலை

இந்நிலையில் நண்பர் ஹைதர் அலிகானை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளதால், தன்னையும் விசாரணைக்கு அழைப்பார்கள் என சரவணன் அச்சம் அடைந்தார். மேலும் போலீஸ் விசாரணைக்கு சென்றால் தனக்கு அவமானம் என எண்ணிய அவர் ஜெகதாப்பட்டினம் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.இதைப்பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் ஜெகதாப்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், தற்கொலை செய்து கொண்ட சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஜெகதாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலாஜி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலையரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்