மலையடிப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 18 பேர் காயம்

மலையடிப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 18 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2018-05-06 22:45 GMT
வையம்பட்டி,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியில் உள்ள புனித சவேரியார் ஆலய திருவிழாவையொட்டி பெரிய அந்தோணியார் பெயரால் நேற்று காலை கோவில் முன்பு உள்ள பாஸ்கா திடலில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 502 காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. மாடுபிடி வீரர்கள் 350 பேர் பதிவு செய்திருந்தனர்.

காளைகளை கால்நடை மருத்துவ குழுவினரும், மாடுபிடி வீரர்களை மருத்துவ குழுவினரும் பரிசோதனை செய்து தகுதி உள்ள காளைகள் மற்றும் மாடு பிடி வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டை ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் பொன்ராமர் தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளையும், அதைத் தொடர்ந்த உள்ளூர் காளைகளும் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

அதைத்தொடர்ந்து பிற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த அந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். அப்போது சில காளைகள் களத்தில் நின்று விளையாடி தன்னை அடக்க வந்த வீரர்களை கொம்பால் தூக்கி வீசியும், காலால் மிதித்து விட்டும் சென்றன. பல காளைகளை வீரர்கள் அடக்கினர்.

இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், பீரோ, கட்டில், சில்வர் பாத்திரங்கள், ஆட்டுக்குட்டி உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

காளைகள் முட்டித் தள்ளியதில் மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 18 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சைஅளிக்கப்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டை மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர், ரெத்தினவேல் எம்.பி, ஆர்.சந்திரசேகர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. .சின்னசாமி, மணப்பாறை அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் எம்.பி.வெங்கடாசலம், என்.சேது, பொதுக்குழு உறுப்பினர் முகமது இஸ்மாயில் மற்றும் பொதுமக்கள் பலர் கண்டுகளித்தனர்.

மணப்பாறை தாசில்தார் தனலட்சுமி, வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் வருவாய்த்துறை, கால்நடைத்துறை அதிகாரிகள் ஜல்லிக்கட்டு வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் படி நடைபெறுகிறதா என்று கண்காணித்தனர். திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை மலையடிப்பட்டி ஜல்லிக்கட்டு பேரவையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்