நொய்யல் ஆற்றில் மழைநீருடன் சாயக்கழிவு கலந்து சென்றதால் விவசாயம் பாதிக்கப்பட வாய்ப்பு

நொய்யல் ஆற்றில் மழைநீருடன் சாயக் கழிவு கலந்து சென்றதால் விவசாயம் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

Update: 2018-05-06 22:45 GMT
நொய்யல்,

கோவை மாவட்டத்தில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறானது திருப்பூர் வழியாக கரூர் மாவட்டம் நொய்யல் பகுதி வழியாக சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த நிலையில் கோவை, திருப்பூரில் பரவலாக மழை பெய்ததால் கரூர் நொய்யல் ஆற்றில் தற்போது தண்ணீர் வருகிறது. இந்த நிலையில் திருப்பூரில் உள்ள சாயப்பட்டறையில் இருந்து வெளியேற்றப்பட்ட சாயக்கழிவுநீர், நொய்யல் ஆற்றில் கலந்ததால் மழைநீரானது மாசடைந்து வந்தது. இதனால் கரூர் நொய்யல் பகுதி விவசாயிகள் அந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

நொய்யல் ஆற்று ஓரத்தில் உள்ள விவசாய கிணறுகள், குடிநீருக்காக வெட்டப்பட்ட ஆழ்துளை கிணறுகள் ஆகியவற்றின் நீராதாரம் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. மேலும் சாயக்கழிவு கலந்த ஆற்று நீரானது சில இடங்களில் விவசாய நிலங்களுக்குள் சென்றதால் பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. மேலும் அந்த ஆற்றுநீரில் மாசு கலந்திருப்பது தெரியாமல் அதில் குளித்து விட்டு சென்றவர்களுக்கு அரிப்பு ஏற்படுவதாக தெரிவித்தனர். மேலும் அந்த நீரை குடிக்கும் கால்நடைகளுக்கும் உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. எனவே கரூர் நொய்யல் ஆற்றினை மாவட்ட நிர்வாகத்தினர் பார்வையிட்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்