கருவேப்பிலங்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; வியாபாரி பலி

கருவேப்பிலங்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார். வக்கீல் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.

Update: 2018-05-06 22:15 GMT
விருத்தாசலம்,

புவனகிரி அருகே உள்ள வத்தராயன்தெத்து கிராமத்தை சேர்ந்தவர் பாண்டித்துரை மகன் செல்வகுமார் (வயது31). இவர் வேப்பூரில் தங்கி, பட்டாசு வியாபாரம் செய்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்தநிலையில் செல்வகுமார் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் வத்தராயன்தெத்து கிராமத்தில் இருந்து வேப்பூருக்கு புறப்பட்டார். கருவேப்பிலங்குறிச்சி அடுத்த டி.வி.புத்தூர் அருகே சென்றபோது, விருத்தாசலத்தில் இருந்து ஆண்டிமடம் நோக்கி எதிரே வந்த கார் ஒன்று, முன்னால் சென்ற கார் மீது மோதி, எதிர்பாராதவிதமாக செல்வகுமார் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீதும் மோதி சாலையோர வயலுக்குள் பாய்ந்தது.

இதில் செல்வகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரில் வந்த விருத்தாசலத்தை சேர்ந்த வக்கீல் காமராஜ், அவருடைய மனைவி ஜெயலட்சுமி(42), உதவியாளர் சுப்பிரமணியன் ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். இதைபார்த்த அந்த வழியாக வந்தவர்கள் ஓடிவந்து விபத்தில் காயமடைந்த கணவன்- மனைவி உள்பட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் பலியான செல்வகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்