டாஸ்மாக் மேற்பார்வையாளரை வெட்டி பணம்- மதுபாட்டில்கள் கொள்ளை 4 மர்மநபர்களுக்கு வலைவீச்சு

தஞ்சை அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரை அரிவாளால் வெட்டி பணம்- மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முகமூடி அணிந்து வந்த 4 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-05-06 22:15 GMT
வல்லம்,

தஞ்சையை அடுத்த வல்லத்தில் தஞ்சை- திருச்சி சாலையில் பாக்யா கார்டன் பகுதியில் டாஸ்மாக்கடை உள்ளது. இந்த கடையில் மேற்பார்வையாளர்களாக தஞ்சை சிந்தாமணி குடியிருப்பு பகுதியை சேர்ந்த லியோ(வயது46), வல்லம் அருகே ஆலக்குடியைச் சேர்ந்த ராமலிங்கம்(42) ஆகியோர் பணியாற்றினர்.

மேலும் விற்பனையாளர்களாக வல்லத்தை சேர்ந்த தர்மராஜ்(42), செந்தில்குமார்(40), வல்லம் அருகே குருவாடிப்பட்டி மாதாகோவில் தெருவைச் சேர்ந்த வீரகுமார்(42) ஆகியோர் பணியாற்றினர். இந்த 5 பேரும் கடையின் விற்பனையை நேற்று முன்தினம் இரவு முடித்து விட்டு விற்பனையான தொகையை கடையில் வைத்து எண்ணிக்கொண்டிருந்தனர்.

அப்போது 4 பேர் முகமூடி அணிந்து கொண்டு 2 மோட்டார்சைக்கிளில் வந்தனர். அதில் இரண்டு பேர் கடையின் வெளியில் நின்றனர். மற்ற 2 பேர் கடையின் உள்ளே புகுந்து தாங்கள் வைத்திருந்த அரிவாள், கத்தியை காட்டி மிரட்டினர். பின்னர் லியோ வைத்திருந்த பணத்தை தருமாறு கேட்டனர். அதற்கு லியோ பணத்தை தர மறுத்தார். உடனே அவர்கள் லியோவின் கை விரலில் வெட்டினர். பின்னர் லியோ வைத்திருந்த ரூ.35 ஆயிரத்தையும், 15 குவாட்டர் மதுபாட்டில்களையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர். அப்போது அங்கிருந்த 4 பேரையும், மதுவாங்க வந்த ஊழியர்களையும் அரிவாளை காட்டி மிரட்டி விட்டு மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.

இதில் காயமடைந்த லியோ சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது குறித்து வல்லம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்