துணிகளை காய போட கம்பி கட்டியபோது மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி சாவு

துணிகளை காய போடுவதற்காக கம்பி கட்டியபோது மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பரிதாபமாக இறந்தனர்.;

Update: 2018-05-06 22:45 GMT
சூலூர்,

கோவையை அடுத்த சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன்புதூரை சேர்ந்தவர் சின்னப்பராஜ் (வயது 63). பெயிண்டர். இவருடைய முதல் மனைவி மாசாணி (58). இவர்களுக்கு குழந்தை இல்லை. சின்னப்பராஜின் 2-வது மனைவி சூலூர் அருகே 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

சூலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் வெயில் அடித்ததால் மாசாணி துணிகளை துவைத்து காய போடுவதற்காக தனது கணவரிடம் கம்பி கட்டி கொடுக்க கூறினார்.

உடனே சின்னப்பராஜ், தனது வீட்டின் முன்பு போடப்பட்டு இருக்கும் சிமெண்ட் சீட்டில் உள்ள இரும்புக்கம்பியில் துணி காய போடுவதற்காக மெல்லிய கம்பியை கட்ட முயன்றார். அப்போது வீட்டிற்கு மின்சாரம் வரும் ஒயரில் மின்கசிவு ஏற்பட்டு சிமெண்ட் சீட்டு இரும்புக்கம்பியில் பரவியது. இது தெரியாமல் சிமெண்ட் சீட்டு இரும்புக்கம்பியில் மெல்லிய கம்பியை கட்டிய போது திடீரென்று சின்னப்பராஜ் மீது மின்சாரம் தாக்கியது.

இதனால் அவர் வலி தாங்காமல் அலறினார். உடனே அவரின் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்த மாசாணி ஓடி வந்து கணவரை பிடித்தார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சூலூர் போலீசார் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மின்வாரிய ஊழியர்கள், சின்னப்பராஜ் வீட்டிற்கு செல்லும் மின்சாரத்தை தடை செய்தனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்கள் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்