அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் தீர்வு: குன்றில் கடவில் சாலை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது

அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் குன்றில்கடவு பகுதியில் சாலை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது.

Update: 2018-05-06 22:15 GMT
பந்தலூர்,

பந்தலூர் தாலுகா அம்மங்காவு பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். பழைய நெல்லியாளத்தில் இருந்து குன்றில்கடவு வழியாக அம்மங்காவுக்கு சாலை செல்கிறது. இதில் குன்றில்கடவு பகுதியில் ஓடும் ஆற்றின் குறுக்கே புதியதாக சிமெண்டு பாலம் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் அதன் இருபுறமும் சாலைகள் அமைக்கப்படவில்லை. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை காணப்பட்டது. மேலும் பொதுமக்களும் பல்வேறு சிரமங்களுக்கு இடையே நடந்து சென்று வந்தனர்.

குன்றில்கடவு பாலத்தில் இருந்து அம்மங்காவு வரை சாலை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கடந்த வாரம் பாலத்தின் இருபுறமும் வாகனங்கள் செல்லும் வகையில் அப்பகுதி மக்கள் மண் சாலை அமைத்தனர்.

இந்த நிலையில் பாலத்தின் அருகே தொடங்கி சுமார் 1 கி.மீட்டர் தூரம் சிமெண்டு சாலை அமைக்க கூடலூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் ரூ.56 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து பணியும் தொடங்கப்பட்டது. இதை அறிந்த பொதுமக்கள் திரண்டு வந்து குன்றில்கடவு பாலம் முதல் தார்ச்சாலை அமைக்க வேண்டும். சிமெண்டு சாலை அமைத்தால் நீண்ட நாள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது என எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் பணியை தடுத்து நிறுத்தினர்.

இதனால் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவு செய்து கொள்ளலாம் என அப்போது பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கூடலூர் ஆர்.டி.ஓ. முருகையன், ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் கிருஷ்ணபிரசாத், ராஜ்குமார் ஆகியோர் குன்றில்கடவு பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் தரப்பில் தரமான சாலை அமைக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டது. இதை ஏற்ற அதிகாரிகள் தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து ஏற்பட்ட உடன்பாட்டின்படி சாலை அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

மேலும் செய்திகள்