தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் மாயமான 2 சிறுமிகளின் உடல்கள் மீட்பு

தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கடல் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான். மாயமான 2 சிறுமிகளின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன.

Update: 2018-05-06 23:00 GMT
ராமேசுவரம்,

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா செலுகை கிராமத்தை சேர்ந்தவர் பூமிநாதன். இவர் நேற்றுமுன்தினம் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என 15 பேருடன் ராமேசுவரத்துக்கு சுற்றுலா வந்தார். இவர்கள் அரிச்சல்முனை பகுதியில் கடலின் அழகை ரசித்துக்கொண்டிருந்தபோது கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த ஜெகநாதன் மகள் இனிதா(வயது 10), ஆனந்தன் மகன் இனியவன் (10), பூமிநாதன் மகள் சுபேதா(11) ஆகியோர் திடீரென மாயமாகி விட்டனர்.

இதையடுத்து பதறிப்போன உறவினர்கள் அங்கும் இங்கும் தேடியபோது கடல் அலையில் சிறுவன் இனியவன் உடல் மட்டும் கரை ஒதுங்கியது. மற்ற 2 பேரும் கடல் அலையில் அடித்துச்சென்றிருக்கலாம் என்று கருதப்பட்டது. அதனை தொடர்ந்து சிறுமிகள் இருவரையும் இரவு முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை சிறுமிகளை கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல், சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையிலான கடலோர போலீசாரும், தீயணைப்பு துறையினரும், மீனவர்களும் தீவிரமாக தேடிவந்தனர். அப்போது அரிச்சல்முனை கடலில் 2 சிறுமிகளின் உடல்கள் மிதந்து வந்தன.

அதனை தொடர்ந்து மீனவர்களின் உதவியுடன் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் அந்த உடல்களை மீட்டு ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்குபின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று தனுஷ்கோடி, அரிச்சல்முனை பகுதிகளில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கடலில் இறங்கி விளையாடிய சுற்றுலா பயணிகளை போலீசார் எச்சரித்து வெளியேற்றினர். 

மேலும் செய்திகள்