‘நீட்’ தேர்வு எழுத புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 21 மாணவர்கள் கேரள மாநிலத்திற்கு பயணம்

நீட் தேர்வு எழுத புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 21 மாணவர்கள் நேற்று கேரள மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

Update: 2018-05-05 23:00 GMT
புதுக்கோட்டை,

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த நீட் தேர்வை எழுத புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் 254 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கு தமிழகத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் நீட் நுழைவுத்தேர்வு எழுத விண்ணப்பித்து உள்ளனர்.

இவர்களில் தாமதமாக விண்ணப்பித்தவர்களுக்கு கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பல சமூக ஆர்வலர்கள் உதவ முன்வந்து உள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக கேரள மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள புதுக்கோட்டை மாவட்ட மாணவ, மாணவிகளை அழைத்து செல்வதற்காக சமூக ஆர்வலர்கள் சார்பில் நேற்று காலையில் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பொது அலுவலக வளாகத்தில் இருந்து ஒரு சுற்றுலா வேன் புறப்பட்டு சென்றது.

இதில் 6 மாணவிகள் உள்பட 21 பேர் நீட் தேர்வு எழுத செல்கின்றனர். இவர்களை முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக்தொண்டைமான், டாக்டர் முத்துராஜா உள்பட பலர் வாழ்த்தி, வழியனுப்பி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை நியாஸ்அகமது, ராமகிருஷ்ணன், அருண்மொழி ஆகியோர் செய்திருந்தனர். இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் தங்களுக்கு வெளிமாநிலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள தேர்வு மையங்களுக்கு நேற்று புறப்பட்டு சென்றனர். 

மேலும் செய்திகள்