புதுச்சேரி மக்களுக்கு இலவச காப்பீடு திட்டம் - நாராயணசாமி தகவல்

புதுச்சேரி மக்களுக்கு இலவச காப்பீடு திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2018-05-05 00:15 GMT
புதுச்சேரி,

புதுவை அரசின் சுகாதாரத்துறை சார்பில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அரசு ஓய்வூதியம் பெறுவோருக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஓய்வூதியதாரர்கள் முதலாம் ஆண்டில் பிரிமியமாக ரூ.4 ஆயிரத்து 248 செலுத்த வேண்டும்.

அடுத்தடுத்த 2 ஆண்டிற்கு 7.5 சதவீத தொகையை கூடுதலாக செலுத்த வேண்டும். இந்த திட்டத்தை சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் நேற்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், சுகாதாரத்துறை செயலாளர் கந்தவேலு, இயக்குனர் ராமன், சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவன துணை பொதுமேலாளர் ஜெயந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஓய்வூதியதாரர், அவரது துணைவர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு விரிவான பங்களிப்பு மருத்துவ காப்பீடு திட்டத்தை வருகிற 2021 வரை புதுவை அரசு செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் ஏற்கனவே உள்ள நோய்கள் உள்பட தொடர் நோய்களுக்கு ரொக்கமில்லா மருத்துவ வசதி வழங்கப்படும்.

இந்த மருத்துவக் காப்பீடு திட்டத்தின் அதிகபட்ச காப்பீட்டு தொகை ரூ.3½ லட்சம் ஆகும். கடுமையான நோய்களான புற்றுநோய், சிறுநீரக கோளாறு, மாற்று அறுவை சிகிச்சை, முக்கிய உறுப்பு அல்லது எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, வால் நரம்பு உள்வைப்புகள், விபத்துகளால் ஏற்படும் பல்வேறு காயங்கள் மற்றும் முக்கிய தண்டுவட அறுவை சிகிச்சை அல்லது தண்டுவட அறுவை சிகிச்சை நிலைப்படுத்துவதற்கு ரூ.50 ஆயிரம் கூடுதலாக வழங்கப்படும்.

இதற்கான காப்பீட்டுத் தொகை 2 தவணையாக கணக்கு மற்றும் கருவூலத்துறையின் மூலம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும். இந்தியா முழுவதிலும் உள்ள 6 ஆயிரம் மருத்துவமனைகளில் இத்திட்டத்தின்கீழ் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

இதேபோல் புதுவை மக்கள் அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு வருகிறோம். அடுத்த கட்டமாக முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மேலும் செய்திகள்