தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலம்: குறைவான மீன்களே கிடைப்பதால் நாட்டுப்படகு மீனவர்கள் ஏமாற்றம் விலை உயர வாய்ப்பு
தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் அதிக மீன்கள் கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்த நாட்டுப்படகு மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் அதிக மீன்கள் கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்த நாட்டுப்படகு மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். குறைவான மீன்கள் கிடைப்பதால் மீன்கள் விலை உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மீன்பிடி தடைக்காலம்
மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15–ந் தேதி முதல் மே மாதம் 30–ந் தேதி வரை 45 நாட்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலமாக அமல் படுத்தப்பட்டு உள்ளது.
இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள், இழுவைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தருவைகுளம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து விசைப்படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளில் உள்ள பழுதுகளை சரிபார்க்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். வலைகளையும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மயில் மீன்
அதே நேரத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் அதிக மீன்கள் கிடைக்கும் என்று நினைத்து இருந்த நாட்டுப்படகு மீனவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எதிர்பார்த்த அளவுக்கு மீன்கள் பிடிபடவில்லை என்று கூறப்படுகிறது.
தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற நாட்டுப்படகு மீனவர்கள் வலையில் முரல், விளமீன், கழிங்கன், கட்டா, மயில்மீன் உள்ளிட்ட மீன்கள் பிடிபட்டு வருகின்றன. நேற்று 20 கிலோ எடை கொண்ட மயில் மீனும் பிடிபட்டு இருந்தது. இந்த மீன் மயில் தோகை போன்ற துடுப்பு கொண்ட மீன் ஆகும்.
நேற்று கட்டமுரல் மீன் ஒரு கிலோ ரூ.250–க்கும், வாளைமுரல் ரூ.160–க்கும், கருப்பு கழிங்கன் ரூ.220–க்கும், பச்சை கழிங்கன் ரூ.280–க்கும் விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து மீனவர் ஒருவர் கூறும்போது, மீன்பிடி தடைக்காலம் என்பதால் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் நாட்டுப்படகில் அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் மீன்கள் குறைவாகவே பிடிபட்டு வருகின்றன. இதனால் மீன் விலை அதிகரித்து உள்ளது. விலை இன்னும் உயர வாய்ப்பு உள்ளது என்றார்.
மீன்களின் விலைவிவரம்
மீன்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:–
கட்டமுரல் – ரூ.280
வாளைமுரல்– ரூ.160
கருப்பு கழிங்கன்– ரூ.220
பச்சை கழிங்கன்– ரூ.280
விளமீன் (சிறியது)– ரூ.130–140
விளமீன் (பெரியது)– ரூ.280–300
செந்நகரை– ரூ.280
பரவை– ரூ.120
கட்டா– ரூ.130