தூத்துக்குடியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு: 6 வாகனங்களுக்கு தகுதிச்சான்று தற்காலிகமாக ரத்து

தூத்துக்குடியில் பள்ளி வாகனங்களில் குறைபாடு கண்டறியப்பட்ட 6 வாகனங்களின் தகுதிச்சான்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

Update: 2018-05-04 21:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் பள்ளி வாகனங்களில் குறைபாடு கண்டறியப்பட்ட 6 வாகனங்களின் தகுதிச்சான்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

ஆய்வு 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களும் முறையாக பராமரிக்கப்பட்டு இயக்கப்படுகிறதா என்பதை ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்து, அந்த வாகனங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அந்தந்த வட்டாரத்துக்கு உட்பட்ட பள்ளிகளின் வாகனங்களை ஏற்கனவே அமைக்கப்பட்ட குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன.

அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கவாத்து மைதானத்தில் தூத்துக்குடி வட்டாரத்துக்கு உட்பட்ட வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் ரங்கநாதன் தலைமையில் ஆய்வாளர்கள் ராஜேஷ், உலகநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, வாகனத்தின் பிளாட்பாரம் தரமாக உள்ளதா, வேககட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு உள்ளதா, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, அவசர கால வெளியேறும் வழி உள்ளதா, படிக்கட்டு உயரம் சரியாக உள்ளதா, ஓட்டுநர் மற்றும் மாணவர்கள் இடையே முறையாக தடுப்புகள் உள்ளதா உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

ரத்து 

தூத்துக்குடி வட்டாரத்தில் உள்ள 172 வாகனங்களில் மொத்தம் 110 வாகனங்கள் நேற்று ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 6 வாகனங்களில் அவசரகால வழி சரியாக இல்லை, படியின் தரம் சரியில்லாமலும், கியர், கிளச் சரியாக இயங்காத வாகனங்கள் உள்ளிட்ட குறைபாடுகள் கண்டறியப்பட்டன.

இந்த 6 வாகனங்களுக்கும் தகுதி சான்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இந்த வாகனங்கள் ஒரு வாரத்துக்குள் குறைபாடுகளை சரி செய்து அனுமதி பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இன்று ஆய்வுக்கு வராத வாகனங்கள் வருகிற 15–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மீண்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதிலும் வராத வாகனங்கள் சிறைபிடிக்கப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நடவடிக்கை 

இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் நேற்று காலை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழ்நாடு அரசு பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2012–ம் ஆண்டு முதல் பள்ளி வாகனங்கள் முறையாக பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் அரசு அறிவித்து உள்ள அனைத்து வழிமுறைகள் பின்பற்றப்பட்டு உள்ளதா என்பதை ஆய்வு செய்து சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

ஆய்வின் முடிவில் வாகனங்களை முறையாக பராமரிக்காமல், வாகன வழிமுறைகளை பின்பற்றாத பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி வட்டத்தில் 172 வாகனங்களும், கோவில்பட்டி வட்டத்தில் 186 வாகனங்களும், திருச்செந்தூர் வட்டத்தில் 102 வாகனங்கள் ஆக மொத்தம் 460 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது, தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த், மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

கோவில்பட்டி 

கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம், விளாத்திகுளம் ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் உள்ள பஸ்கள், வேன்கள் உள்ளிட்ட 184 வாகனங்களை ஆய்வு செய்யும் பணி, கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் மன்னர் மன்னன், மோட்டார் வாகன ஆய்வாளர் அமர்நாத், தொடக்க கல்வி அலுவலர் செல்ல குருசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் பள்ளிக்கூட வாகனங்களை ஆய்வு செய்தனர்.

மொத்தம் 184 வாகனங்களில் 137 வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் 11 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டன. அவற்றில் குறைபாடுகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வருமாறு, அதிகாரிகள் அந்த வாகனங்களை திருப்பி அனுப்பினர். மற்ற 47 வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடக்கிறது.

மேலும் செய்திகள்