புதுவை மாநிலத்தின் வரி வருவாயை உயர்த்த வேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்

அனைத்து துறைகளுக்கும் இலக்கு நிர்ணயித்து மாநிலத்தின் வரி வருவாயை உயர்த்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தினார்.

Update: 2018-05-04 00:15 GMT
புதுச்சேரி,

புதுவையில் வணிக வரித்துறை சார்பில் ஆய்வுகள் மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் கடந்த மாதம் 142 வணிக வளாகங்களில் ஆய்வு மேற்கொண்டன. இதில் ரசீது வழங்காத மற்றும் விற்பனையை குறைத்துக் காட்டிய 9 வணிக நிறுவனங்கள் கண்டறியப்பட்டன.

அந்த நிறுவனங்களிடம் இருந்து ஏற்கனவே செலுத்த வேண்டிய வரி மற்றும் அபராதம் ஆகியவை சேர்த்து மொத்தம் ரூ.47லட்சத்து 63 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. மேலும் முறையாக ரசீது வழங்காத 2 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. 6 இடங்களில் வாகன சோதனை நடத்தியதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு அதற்கான அபராத தொகையாக ரூ.1 லட்சத்து 87 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

வணிக வரித்துறையின் இந்த நடவடிக்கை தொடர்பாக கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.

வணிகவரித்துறையின் இதுமாதிரியான சோதனை தினமும் நடத்தப்பட்டால் சரக்கு மற்றும் சேவை வரியின் மூலம் புதுச்சேரியின் வரி வருவாய் குறைந்தது ரூ.1000 கோடியாக உயரும். இதன்மூலம் வருடாந்திர கடனை அடைப்பதுடன், மாநிலத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளலாம். மேலும் வணிகவரித்துறையின் அமலாக்க நடவடிக்கைகளை போக்குவரத்து காவல்துறை, சொத்து வரி, கழிவு நீர் கட்டணம், குடிநீர் கட்டணம், கேபிள் வரி, சாலை வரி, மின்சார திருட்டை தடுத்தல், பாக்கி வைத்துள்ள வரிகள் மற்றும் கட்டணங்களை வசூலித்தல் உள்ளிட்டவைகளை செய்தால் மேலும் ரூ.1000 கோடிக்கு வரி வசூல் உயரும்.

இதன் மூலம் ஊழியர்களுக்கு நிலுவை தொகை வழங்கலாம், பழைய பில்களுக்கான பாக்கி தொகையை செலுத்தலாம். வருங்கால வைப்பு நிதியை சரி செய்யலாம். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் தொகைகளை வழங்கலாம். வருவாய் உயர்ந்தால் கடன் வாங்குவது தடுக்கப்பட்டு, வருங்கால தலைமுறையை கடன் சுமையில் இருந்து காக்க முடியும்.

நாம் எப்போதும் மத்திய அரசிடம் நிதி கேட்கிறோம், மத்திய அரசு போதுமான நிதி தரவில்லை என்றால் குற்றம் சாட்டுகிறோம். மத்திய அரசிடமிருந்து அதிக நிதி பெற வேண்டியது அவசியம். அதேசமயம் நாமும் நம்முடையை வருவாயை உயர்த்த வேண்டும். வருவாய் ஈட்டக்கூடிய அரசின் அனைத்து துறைகளுக்கும் இலக்கு நிர்ணயித்து அதை அடைய நேர்மையாக கடமையை செய்ய வேண்டும்.

ஏனெனில் எதிர்கால திட்டங்களில் முதலீடு செய்வதற்கான நிதி புதுச்சேரியில் இல்லை. கிராமப்புறங்கள் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால் தற்போது வளங்களை இழந்துவிட்டது. முதலீடு மற்றும் வருவாயை பெருக்குவதில் இந்த ஆண்டு இலக்கை அடைய வேண்டும்.

வரிகளும், நிலுவையில் உள்ள கட்டணங்களும் மக்களின் பணம்தான். அதனை துறைகள் மூலமாக வசூல் செய்து அந்த பணத்தை மக்கள் நலத்திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். வருவாய் ஈட்டும் துறைகள் வருடாந்திர இலக்குகளை நிர்ணயித்து, அதன்படி நிதியை திரட்ட தினமும் சோதனை, கண்காணிப்பு மற்றும் அமல்படுத்துதல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாதவர்களிடம், வணிக வரித்துறையைப்போல் அபராதம் விதித்து வசூலிக்க வேண்டும்.

இதுபோன்ற நடவடிக்கைகளில் கூட்டாக செயல்பட்டால் அனைவரும் சட்டத்தை கடைபிடிப்பார்கள். புதுவை நிர்வாகத்தை திறமையானதாகவும், மரியாதைக்குரியதாகவும் மாற்ற வேண்டும். இந்த புனிதமான கடமையை நிறைவேற்றுங்கள். வருவாய் ஈட்டுபவர்கள் இலக்கு நிர்ணயித்து, அதை அடைய வேண்டும். சிறப்பாக செயல்படுபவர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். வருமானத்தை உயர்த்தினால்தான் திட்டங்களை செயல்படுத்த முடியும். புதுவை மாநிலத்தின் தேவை அதிகமாக உள்ளது. இந்த ஆண்டு வருவாயை உயர்த்தி மாற்றிக்காட்டுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்