புதுவை அரசு சார்பில் எழுத்தாளர்களுக்கு விருதுகள், பொற்கிழி வழங்கப்படும் நாராயணசாமி அறிவிப்பு

புதுவை அரசு சார்பில் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களுக்கு விருதுகள், பொற்கிழி ஆகியவை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.;

Update: 2018-05-04 00:00 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி அரசு கலை, பண்பாட்டுத்துறை சார்பில் புதுவையை சேர்ந்த சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. புதுவை கூட்டுறவு ஒன்றிய கருத்தரங்க கூடத்தில் நடைபெற்ற விழாவுக்கு லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கலைப் பண்பாட்டுத்துறை செயலர் தேவேஷ் சிங் முன்னிலை வகித்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு நினைவுப்பரிசு மற்றும் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது.

இந்த விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். சங்க காலம் முதல் தற்போது வரை எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களுக்குள் போட்டி இருக்கும். புதுவை அரசு சார்பில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சனின் 57 ஆண்டு இலக்கிய பணிக்கு பாராட்டு விழாவில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் இணைந்து வந்துள்ளனர்.

புதுவை மாநிலத்திற்கு என தனி வரலாறு இல்லை. எனவே இளையசமுதாயம் புதுவையை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென ஆனந்த ரங்கப்பிள்ளை எழுதிய ‘டைரி’ மூலமாக வரலாற்றை தொகுக்க வேண்டுமென பிரபஞ்சனிடம் கோரிக்கை வைத்தேன். அவரும் அதையேற்று கொண்டுள்ளார். புதுவை தமிழ் வளர்ச்சிக்குழுவில் பிரபஞ்சனுக்கு பொறுப்பு வழங்கப்படும்.

புதுவை அரசு சார்பில் பத்ம ஸ்ரீ விருதுக்கு பிரபஞ்சன் பெயரை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வோம். தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு புதுவையை சேர்ந்தவர்கள் சளைத்தவர்கள் இல்லை.

புதுவையில் கலையரங்கம் இல்லை என கலைஞர்கள் ஆதங்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்காக ரூ.14 கோடி செலவில் கலையரங்கம் கட்டப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசு ரூ.9 கோடி வழங்குவதாக தெரிவித்தது. தற்போது ரூ.6 கோடி வழங்கி உள்ளது.

கலைமாமணி விருது பெற்றவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும், எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களுக்கு பாரதியார், பாரதிதாசன் பெயர்களின் விருதுகள் மற்றும் பொற்கிழி வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அரசு நிதிநிலைக்கு ஏற்ப எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களுக்கு விருதுகள் மற்றும் பொற்கிழி வழங்கப்படும். அதற்காக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.

முன்னதாக துறை இயக்குனர் கணேசன் வரவேற்றார். விழாவில் சபாநாயகர் வைத்திலிங்கம், கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, தேசிய மீனவர் சம்மேளனத் தலைவர் இளங்கோ, புதுவை தமிழ்ச்சங்க தலைவர் முத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தலைவர் தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் பொதுச்செயலாளர் காமராசு, தமிழ் மாநில பொருளாளர் ராமச்சந்திரன், கலை இலக்கிய பெருமன்றத்தின் செயலர் பாலசுப்பிரமணியன் மற்றும் எழுத்தாளர்கள் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் எழுத்தாளர் பிரபஞ்சன் ஏற்புரை வழங்கினார்.

மேலும் செய்திகள்