ஏற்காட்டில் கோடைவிழா-மலர் கண்காட்சி
ஏற்காட்டில் வருகிற 12-ந் தேதி முதல் கோடைவிழா-மலர் கண்காட்சி 5 நாட்கள் நடக்கிறது. இது தொடர்பான முன்னேற்பாடு குறித்து அதிகாரிகளுடன் நேற்று மாவட்ட கலெக்டர் ரோகிணி ஆலோசனை நடத்தினார்.
சேலம்,
“ஏழைகளின் ஊட்டி” என்றழைக்கப்படும் ஏற்காடு, தமிழகத்தில் சிறந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். ஏரியில் படகு சவாரி செய்வதற்கான வசதிகள், ரோஜா கார்டன், அண்ணாபூங்கா, லேடீஸ்சீட், ஜென்ஸ்சீட், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் மலைக்கோவில், தலைச்சோலை அண்ணாமலையார் கோவில், கிளியூர் நீர்வீழ்ச்சி, ராஜராஜேஸ்வரி கோவில் என ஏற்காட்டில் எழில் கொஞ்சும் இடங்கள் அதிகளவில் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் மலர்கண்காட்சி மற்றும் கோடை விழா மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத்துறை சார்பில் 43-வது கோடை விழா-மலர் கண்காட்சி வருகிற 12-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. 12-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார். பின்னர், அவர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிலையில், ஏற்காட்டில் நடைபெற உள்ள 43-வது கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரோகிணி தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் உள்பட அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ரோகிணி பேசும் போது கூறியதாவது:-
ஏற்காட்டில் வருகிற 12-ந் தேதி முதல் நடக்கும் கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு தொடங்கி வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். மேலும், 3 அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள். ஏற்காடு அண்ணா பூங்காவில் 1 லட்சத்திற்கு மேற்பட்ட மலர்களை கொண்டு மலர் கண்காட்சி தோட்டக்கலைத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. மேலும், காய்கறி கண்காட்சி, பழக்கண்காட்சி ஆகியவையும் நடத்தப்படுகிறது. கோடை விழாவில் அனைத்துத்துறைகளையும் ஒருங்கிணைந்து தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் பல்துறை பணிவிளக்க முகாம் நடத்தப்பட உள்ளது.
மேலும், நாய்கண்காட்சி, ஆரோக்கிய குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவு போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டி, படகு போட்டிகள் நடத்தப்படவுள்ளது. கலை பண்பாட்டுத்துறை சார்பில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
ஏற்காடு சுற்றுலா பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட் கள் உபயோகம் தடை செய்யப்பட்டுள்ளதால் பிளாஸ்டிக் அல்லாத ஏற்காடு கோடை விழாவாக கொண்டாட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு கோடை விழா பசுமை விழாவாக கொண்டாடப்படும். கோடை விழாவுக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளிடம் 1 லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மலர் கண்காட்சியில் கிரிக்கெட் வீரர், விமானம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை, டிராக்டர், நடனமாடும் பெண்கள் போன்றவை பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சுற்றுலா பயணிகள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.