திருச்சியில் 8-ந் தேதி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் கூட்டு நடவடிக்கைக்குழு அறிவிப்பு

காவிரி மேலாண்மை வாரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் நிலைக்கு எதிராக திருச்சியில் 8-ந் தேதி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என கூட்டு நடவடிக்கைக்குழு அறிவித்தது.

Update: 2018-05-03 22:45 GMT
திருச்சி,

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளரும் இந்திய விவசாய சங்கங்களின் மாநில தலைவருமான குருசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன மாநில தலைவர் விசுவநாதன், தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டோர் சங்க மாநில தலைவர் கோபாலகிருஷ்ணன், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, காவிரி பாசன விவசாய பாதுகாப்பு சங்க நிர்வாகி தனபாலன், கடைமடை பாசன விவசாய பாதுகாப்பு சங்க தலைவர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, அகில இந்திய கரும்பு விவசாய சங்க தலைவர் விருத்தகிரி மற்றும் செல்வம் உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து 40-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உரிய அவகாசம் கொடுத்தும் மத்திய அரசு, கர்நாடக மாநில அரசுக்கு சாதகமான முடிவை எடுக்கும் வகையில் அப்பீல் செய்தது என்றும், 15 ஆண்டுகளுக்கு அப்பீல் என்பதே கிடையாது என்று உத்தரவிட்டும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மேலும் அவகாசம் வேண்டும் என கேட்ட அப்பீல் மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றது எப்படி? என்றும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

புதிய உத்தரவு

இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு அளித்த காலஅவகாசம் நேற்றுடன் முடிந்தது. அதைத்தொடர்ந்து நேற்று உடனடியாக தமிழ்நாட்டுக்கு 4 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனவும், வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு சொல்லும் காரணங்களை ஏற்க முடியாது என்றும் உத்தரவிட்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற 8-ந் தேதிக்கு தள்ளி வைத்தார். இது குறித்து விவாதித்த விவசாயிகள், சுப்ரீம் கோர்ட்டு வழக்கை தள்ளி வைத்தது கண்டனத்துக்குரியது என கூட்டத்தில் தெரிவித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் குருசாமி, தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன மாநில தலைவர் விசுவநாதன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வெளிப்படையாக தெரிந்தது

காவிரி நதிநீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பை இறுதிப்பட செயல் படுத்த இயலாத ஒரு சூழ்நிலையை இன்றைக்கு அறிவித்துள்ள முடிவின்படி வெளிப்படையாக தெரிகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பாராளுமன்றம் பெரிதா? சட்டமன்றம் பெரிதா? இல்லை நீதித்துறை பெரிதா? என்கிற கேள்வி எழுப்பப்படுகிறபோது, இரண்டு அங்கங்களையும் நீதித்துறைதான் சரிப் படுத்த வேண்டும் என சொல்லி இருக்கிறது.

ஆனால், நீதித்துறையே பாராளுமன்றத்திற்கும், நிர்வாகத்துறைக்கும் பின்போகின்றது என்பதை தலைமை நீதி பதியின் தலைமையில் இருக்கிற சுப்ரீம் கோர்ட்டு நிரூபித்து காட்டி உள்ளது. கீழமை பாசன உரிமை என்பது சர்வதேச சட்டத்தின்படியும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படியும் இந்தியாவில் இயற்றப்பட்டுள்ள நதிநீர் பங்கீட்டு சட்டப்படியும் நிரூபிக்கப்பட்ட ஒன்று.

8-ந் தேதி உண்ணாவிரதம்

காவிரி நீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை சுப்ரீம் கோர்ட்டும், மத்திய அரசும், கர்நாடக அரசும் பறிப்பதை இந்த தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

சுப்ரீம்கோர்ட்டின் போக்கை மக்களுக்கும் எடுத்து சொல்லும் வகையில் வருகிற 8-ந் தேதி திருச்சியில் அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், மக்கள் அமைப்பு சார்ந்த ஒரு மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்