மகளிர் போலீஸ் நிலையம் முன்பு வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி

மனைவியை சேர்த்து வைக்க கோரி நாகை மகளிர் போலீஸ் நிலையம் முன்பு வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.;

Update: 2018-05-03 22:45 GMT
நாகப்பட்டினம்,

நாகையை அடுத்த அந்தனப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் விமல்ராஜ் (வயது24). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமுதா (23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது 9 மாத பெண்குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விமல்ராஜ், அமுதாவிற்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அமுதா கணவரிடம் கோபித்து கொண்டு தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து விமல்ராஜ், நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மனைவியையும், குழந்தையையும் தன்னிடம் சேர்த்து வைக்குமாறு மனு அளித்தார். இதையடுத்து மகளிர் போலீசார் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விமல்ராஜ் திடீரென அமுதாவிடம் இருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு போலீஸ் நிலையம் முன்பு சென்று, தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் தன்னுடைய கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். உடனே போலீசார் அவரை தடுத்து நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து நாகை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்