கிருஷ்ணகிரியில் டீக்கடை, ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

கிருஷ்ணகிரியில் டீக்கடை மற்றும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2018-05-03 23:00 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவன் உத்தரவின்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் பிருந்தா தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சந்திரன், சிவமணி மற்றும் துளசிராம் ஆகியோர் நேற்று காலை கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், டீ கடைகளில் தரமில்லாமல் பயன்படுத்தி வந்த டீ தூள்களை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.

தொடர்ந்து நகரில் சினிமா தியேட்டர்களில் உள்ள கேன்டீன்களில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், தரமில்லாமல், தயாரிப்பு நாள் குறிப்பிடப்படாமல் வைத்திருந்த உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் கிருஷ்ணகிரி - சேலம் சாலையில் உள்ள ஓட்டலில் இந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், தடை செய்யப்பட்ட கலர் பொடியை பயன்படுத்தி சிக்கன் தயாரித்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இது தொடர்பாக மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பிருந்தா கூறியதாவது:-

உணவுப் பொருட்கள் தரமில்லாமல் தயாரிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவுக் கடைகளிலும் இரண்டு குழுக்களாக ஆய்வு மேற்கொண்டுள்ளோம். அதில், உணவுப் பொருட்களை தயாரிக்க கெமிக்கல் பவுரைப் பயன்படுத்தக் கூடாது. மேலும் தரமில்லாமலும், சுகாதாரமற்ற முறையிலும் உணவுகளை தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டால், முதலில் எச்சரிக்கையும் பின்னர் கடுமையான அபராதமும் விதிக்கப்படுகிறது.

அவ்வாறு தரமில்லாமல் உணவு தயாரிப்பது குறித்து பொதுமக்கள் 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்