அப்துல்கலாம் மணிமண்டபத்தில் பயன்பாட்டுக்கு வராத கழிப்பறை

ராமேசுவரம் பேய்க்கரும்பில் உள்ள அப்துல்கலாம் மணிமண்டபத்தில் கழிப்பறை கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு வராததால் பார்வையாளர்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

Update: 2018-05-03 23:00 GMT
ராமேசுவரம்

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடம், மணிமண்டபம் அமைந்துள்ளது. கடந்த 10 மாதத்தில் மட்டும் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் மணிமண்டபத்தை பார்த்து சென்றுள்ளனர்.

தற்போது கோடைகால விடுமுறையாக உள்ளதால் கடந்த 2 வாரத்திற்கு மேலாக இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள், மாணவ-மாணவிகள், குழந்தைகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அப்துல்கலாம் மணிமண்டபத்தை காணவரும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பெண்கள் மற்றும் ஆண்களுக்கு என தனித்தனியாக 20-க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன. ஆனால் இவை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் உள்ளது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள், வயதானவர்கள் கடும்அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே பல மாதங்களாக மூடியே கிடக்கும் அப்துல்கலாம் மணிடபத்தில் கட்டி முடிக்கப்பட்டு காட்சிப்பொருளாக உள்ள ஆண்கள், பெண்கள் கழிப்பறை கட்டிடத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகமும், பாதுகாப்புதுறை அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்