அரசு ஊழியர் தற்கொலை சம்பவம்; உறவினர்கள் 2-வது நாளாக போராட்டம்

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அரசு ஊழியர் தற்கொலை சம்பவத்தில் உறவினர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இறந்து போன சிற்றரசு உடலை வாங்க மறுத்து விட்டனர்.;

Update: 2018-05-03 22:15 GMT
செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சூனாம்பேடு காலனி பகுதியை சேர்ந்தவர் சிற்றரசு (வயது 45). அச்சரப்பாக்கம் உதவி கல்வி தொடக்க அலுவலகத்தில் இளைநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து கடந்த செவ்வாய்க் கிழமை இருவரும் மோதலில் ஈடுபட்டனர். அப்போது சிற்றரசு ஆனந்தனின் நெற்றியில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆனந்தன் மதுராந்தகத்தை அடுத்த சூனாம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். படுகாயம் அடைந்த ஆனந்தன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

சூனாம்பேடு போலீசார் சிற்றரசை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இரவு 1 மணி அளவில் சிற்றரசு தான் அணிந்திருந்த உள்ளாடையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நேற்று முன்தினம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரி எதிரே மதுராந்தகம் - செங்கல்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று அவரது உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சூனாம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிகுமாரை பணியிடை நீக்கம் செய்து அவரை கைது செய்யவேண்டும். இறந்து போன சிற்றரசின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறி 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் சிற்றரசு உடலை வாங்க மறுத்து விட்டனர்.

மேலும் செய்திகள்