‘எனது மகனின் விருப்பப்படி இனிமேல் மது குடிக்க மாட்டேன்’ தற்கொலை செய்து கொண்ட மாணவர் தினேஷின் தந்தை உருக்கமான பேட்டி
‘எனது மகனின் விருப்பப்படி இனிமேல் மது குடிக்க மாட்டேன்‘ என்று தற்கொலை செய்து கொண்ட மாணவர் தினேஷின் தந்தை உருக்கமாக கூறினார்.
சங்கரன்கோவில்,
‘எனது மகனின் விருப்பப்படி இனிமேல் மது குடிக்க மாட்டேன்‘ என்று தற்கொலை செய்து கொண்ட மாணவர் தினேஷின் தந்தை உருக்கமாக கூறினார்.
மாணவர் தற்கொலை
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியை அடுத்த கே.ரெட்டியபட்டியை சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மகன் தினேஷ் நல்லசிவன் (வயது 17). பிளஸ்–2 முடித்துள்ள இவர் நேற்று முன்தினம் காலை நெல்லையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனது தந்தை மாடசாமிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும், அவர் மதுப்பழக்கத்தை கைவிட மறுத்ததாலும் மாணவர் தினேஷ் நல்லசிவன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதியிருந்த கடிதத்தில், தான் இறந்த பிறகாவது மதுப்பழக்கத்தை கைவிடுமாறு தந்தைக்கு அவர் உருக்கமான கோரிக்கை விடுத்து இருந்தார். மேலும் பிரதமர் மற்றும் தமிழக முதல்–அமைச்சர் மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தந்தை கதறல்
நேற்று முன்தினம் மாலை மாணவர் தினேஷ் நல்லசிவனின் உடல் அடக்கம் சொந்த ஊரான கே.ரெட்டியபட்டியில் நடந்தது. அப்போது மாடசாமி தனது மகனின் உடலை பார்த்து கதறி அழுதார். எனது குடிப்பழக்கதால் டாக்டர் ஆக வேண்டிய மகனை இழுந்து விட்டேனே என்று கூறி கதறி துடித்தார்.
இந்த நிலையில் தனது மகனின் விருப்பப்படி இனிமேல் குடிக்க மாட்டேன் என்று மாடசாமி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கண்ணீர்மல்க கூறியதாவது:–
மதுக்கடைகளை மூட வேண்டும்
எனது மகன் குடிப்பழக்கத்தை கைவிடும்படி என்னிடம் எவ்வளவோ கேட்டுக்கொண்டான். ஆனால் என்னால் குடிப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. இப்போது டாக்டர் ஆக வேண்டிய எனது மகனை இழந்து தவிக்கிறேன். எனது மற்ற பிள்ளைகளையும் அவன் கவனித்துக் கொள்வான் என்று நினைத்து இருந்தேன். எனது உடன்பிறந்த சகோதரர்கள் நல்ல முறையில் அவனை படிக்க வைத்தனர். அவன் இந்த முடிவை எடுத்திருக்கக்கூடாது. வாழ்ந்து காட்டியிருக்க வேண்டும். அவனது விருப்பப்படி நான் குடிப்பழக்கத்தை நிறுத்தி விட்டேன். இனிமேல் குடிக்க மாட்டேன். அப்போதுதான் அவனது ஆத்மா சாந்தி அடையும்.
என்னை பார்த்து மது அருந்துபவர்கள் திருந்த வேண்டும். மாணவர்கள் மற்றும் குடும்பத்தை சீரழிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.