நெல்லையில் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு ஆன்லைன் மூலம் பதியும் பணி தொடங்கியது ஒரே நாளில் 46 பேர் விண்ணப்பித்தனர்

நெல்லையில் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு ஆன்லைன் மூலம் பதியும் பணி நேற்று தொடங்கியது. ஒரே நாளில் 46 பேர் விண்ணப்பித்தனர்.;

Update: 2018-05-03 21:30 GMT
நெல்லை, 

நெல்லையில் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு ஆன்லைன் மூலம் பதியும் பணி நேற்று தொடங்கியது. ஒரே நாளில் 46 பேர் விண்ணப்பித்தனர்.

ஆன்லைன் பதிவு 

சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் 500–க்கும் மேற்பட்ட அரசு மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் மூலம் சென்னையில் நடந்து வந்தது. இந்த நடைமுறையில் இந்த ஆண்டு முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது ஆன்லைன் கலந்தாய்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதற்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் பணி தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. பாளையங்கோட்டையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டலத்தில் காலை 9 மணிக்கு ஆன்லைன் பதிவு தொடங்கியது. இதை நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.

அப்போது அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல டீன் சக்திநாதன், தொழில் நுட்ப இயக்குனர் ஜார்ஜ் வாஷிங்டன் மற்றும் போராசிரியர்கள் உடன் இருந்தனர்.

விண்ணப்ப கட்டணம் 

தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் பதிவு நடந்தது. பல்கலைக்கழக வளாக உதவி மையத்தில் கம்ப்யூட்டர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதன் மூலம் மாணவர்களுக்கு ஆன்லைன் பதிவு செய்வது எப்படி? என பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர். அதேபோல்

இதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆகும். எஸ்.சி.–எஸ்டி. பிரிவு மாணவர்களுக்கு ரூ.250 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கட்டணத்தை வங்கி மூலம் செலுத்த வேண்டும்.

12 வகையான தகவல்கள் 

மேலும் ஈ மெயில் முகவரி, செல்போன் எண்கள் கொடுக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தில் 12 வகையான தகவல்கள் கேட்கப்பட்டு உள்ளன. இவைகளை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வர முடியாத மாணவர்கள் தனியார் புரோவுசிங் மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். கிராமப்புற மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் நெல்லை மண்டலம், நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு நேரிடையாக சென்று விண்ணப்பிக்கலாம். வருகிற 30–ந் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

ஒரே நாளில் 46 பேர் 

நேற்று காலை 9 மணிக்கு ஆன்லைன் பதிவு தொடங்கி, மாலை 5 மணி வரை நடந்தது. அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல அலுவலகத்தில் 25 பேரும் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் 21 பேரும் என மொத்தம் ஒரே நாளில் 46 மாணவ–மாணவிகள் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தனர். 

மேலும் செய்திகள்