தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.;
கோவில்பட்டி,
தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
பந்தல் அமைக்கும் பணி
கோவில்பட்டியில் ரூ.81 கோடியே 82 லட்சம் செலவில் நிறைவேற்றப்பட்ட 2–வது குடிநீர் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடக்க விழா, கோவில்பட்டி ஆயிரவைசிய மேல்நிலைப்பள்ளிக்கூட மைதானத்தில் வருகிற 11–ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி, 2–வது குடிநீர் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.
இதை முன்னிட்டு, ஆயிரவைசிய மேல்நிலைப்பள்ளிக்கூட மைதானத்தில் 20 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் பந்தல் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பந்தல்கால் நாட்டு விழா நேற்று காலையில் நடந்தது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கி, பந்தல்கால் நாட்டினர்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:–
ரூ.128 கோடி செலவில்...
மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2012–ம் ஆண்டு ரூ.81 கோடியே 82 லட்சம் செலவில் தொடங்கப்பட்ட கோவில்பட்டி 2–வது குடிநீர் திட்டம், வருகிற 2040–ம் ஆண்டு கோவில்பட்டியின் மக்கள் தொகையை கருத்தில்கொண்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது. தற்போது கோவில்பட்டிக்கு தினமும் 60 லட்சம் லிட்டர் குடிநீர் சீவலப்பேரியில் இருந்து வினியோகம் செய்யப்படுகிறது. 2–வது குடிநீர் திட்டத்தின் மூலம் தினமும் 1 கோடியே 40 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
மேலும் தூத்துக்குடியில் நடைப்பயிற்சிக்கான பூங்கா, பள்ளி கட்டிடங்கள், 130 பஞ்சாயத்துகளில் பூங்காக்கள், கால்நடை மருந்தகங்கள், பொதுப்பணித்துறை, வேளாண்மை துறை சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் என மொத்தம் ரூ.128 கோடி செலவில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்ட பணிகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
பூரண மதுவிலக்கு
மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016–ம் ஆண்டு 500 டாஸ்மாக் கடைகளையும், பின்னர் 2017–ம் ஆண்டு முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 500 டாஸ்மாக் கடைகளையும் மூடினர். 5 ஆண்டுகளில் படிப்படியாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும். மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்பதற்கு புனர்வாழ்வு மையம் அமைக்கவும், மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு ரூ.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. தந்தையின் மது குடிக்கும் பழக்கத்தால் நெல்லையில் பள்ளி மாணவர் தற்கொலை செய்தது வருந்தத்தக்கது. அந்த மாணவரின் குடும்பத்துக்கு அரசு உதவி செய்யும்.
காவிரி நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை கடந்த 1974–ம் ஆண்டு புதுப்பிக்காமல் தமிழகத்துக்கு துரோகம் செய்தது தி.மு.க.தான். அந்த கட்சியுடன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூட்டணி அமைத்து, அரசியல் ஆதாயத்துக்காக மாறி மாறி பேசி வருகிறார். காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், கோர்ட்டின் நடவடிக்கை பற்றி கருத்து கூற முடியாது. நீட் தேர்வு எழுத வேறு மாநிலங்களில் மையம் ஒதுக்கப்பட்ட தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் நீட் தேர்வு மையம் அமைக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது. கல்லூரிகளில் அரசியல் பற்றி பேசக் கூடாது என்று தடை விதித்தது நல்ல முயற்சியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரிகள்
விழாவில் மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், கோவில்பட்டி உதவி கலெக்டர் (பொறுப்பு) செழியன், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், தாசில்தார் பரமசிவன், குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் அருள்தாஸ், கோட்ட பொறியாளர் விசுவலிங்கம், உதவி கோட்ட பொறியாளர் லட்சுமணன், நகரசபை ஆணையாளர் அச்சையா, என்ஜினீயர் குருசாமி, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், முன்னாள் மத்திய மந்திரி கடம்பூர் ஜனார்த்தனன், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் சந்திரன், நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், பள்ளி செயலாளர் மாரியப்பன், நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன், தலைமை ஆசிரியர் நீலமேகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.