முறப்பநாடு அருகே மாட்டுவண்டி போட்டி: 2 வண்டிகள் மோதி உடைந்தன; 6 பேர் காயம்
முறப்பநாடு அருகே நடந்த மாட்டுவண்டி போட்டியில் 2 வண்டிகள் மோதி உடைந்தன. இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.
தூத்துக்குடி,
முறப்பநாடு அருகே நடந்த மாட்டுவண்டி போட்டியில் 2 வண்டிகள் மோதி உடைந்தன. இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.
கோவில் கொடை விழா
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள கொம்புக்காரநத்தம் துர்க்கை அம்மன் கோவில் கொடை விழாவையொட்டி நேற்று காலை கொம்புக்காரநத்தம்–பொட்டலூரணி விலக்கு ரோட்டில் மாட்டு வண்டி போட்டி நடந்தது. இதில் சிறிய மாட்டுவண்டி, பூஞ்சிட்டு மாட்டு வண்டி என இரு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளை தூத்துக்குடி புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ் தொடங்கி வைத்தார்.
சிறிய மாட்டு வண்டி போட்டி 6 மைல் தூரம் நடந்தது. இந்த போட்டியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 25 வண்டிகள் கலந்து கொண்டன. இதில் வடக்கு காரசேரியை சேர்ந்த கனகராஜ் என்பவர் வண்டி முதல் இடமும், ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த பச்சைபெருமாள் வண்டி 2–வது இடமும், வெள்ளூரைச் சேர்ந்த முத்தையா வண்டி 3–வது இடமும் பிடித்தது.
2 வண்டிகள் மோதல்
தொடர்ந்து பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டி நடந்தது. இதில் 30 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இந்த பந்தயத்தில் மாடுகள் ஒன்றையொன்று முந்திக் கொண்டு சீறிப்பாய்ந்தன. அப்போது 2 மாட்டு வண்டிகள் ஒன்றோடு ஒன்று உரசின. இதில் அந்த 2 வண்டிகளும் உடைந்து கீழே சரிந்தன. இதனால் அந்த வண்டிகளில் இருந்த சாயல்குடியை சேர்ந்த அண்ணாமலை உள்பட 6 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.
இந்த போட்டியில் முதல் இடத்தை தென்காசியை சேர்ந்த பிரபு என்பவரது வண்டியும், 2–வது இடத்தை முத்தையா வண்டியும், 3–வது இடத்தை பச்சைபெருமாள் வண்டியும் பிடித்தன. வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
விழாவில் வீரவிளையாட்டு கழக மாவட்ட செயலாளர் விஜயகுமார், முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்–இன்ஸ்பெக்டர்கள் வேல்ராஜ், சோனியா, அஜிமல்ஜெனிட் மற்றும் விழாக்குழுவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.