தூத்துக்குடி மாவட்டத்தில் தாட்கோ மூலம் 2,584 பயனாளிகளுக்கு ரூ.12¼ கோடி மானியம் கலெக்டர் வெங்கடேஷ் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் தாட்கோ மூலம் 2,584 பயனாளிகளுக்கு ரூ.12¼ கோடி மானியம் வழங்கப்பட்டு உள்ளது.

Update: 2018-05-03 20:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் தாட்கோ மூலம் 2,584 பயனாளிகளுக்கு ரூ.12¼ கோடி மானியம் வழங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

தாட்கோ திட்டம் 

தமிழ்நாட்டில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுய தொழில் செய்ய மானியத்துடன் கடன் உதவிகள் வழங்கி, அவர்களது வாழ்வாதாரம் உயர அரசு வழிவகை செய்து உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட தாட்கோ மூலம் மகளிர் வேளாண் நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டுத் திட்டம், எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல், சில்லரை விற்பனை நிலையம் அமைத்தல், தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்புத் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மானியம் 

மாவட்டத்தில் 2011–12 முதல் 2017–18 வரை மகளிர் நிலம் வாங்கும் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 17 ஆயிரம் மானியமும், ரூ.7 லட்சத்து 39 ஆயிரம் வங்கி கடனும், தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 611 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 52 லட்சத்து 68 ஆயிரம் மானியமும், ரூ.16 கோடியே 93 லட்சத்து 64 ஆயிரம் வங்கி கடனும், இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 213 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 24 லட்சத்து 96 ஆயிரம் மானியமும், ரூ.8 கோடியே 58 லட்சம் வங்கி கடனும், மகளிர் சுய உதவிக்குழுக்கான சுழல்நிதி திட்டத்தின் கீழ் 322 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 5 ஆயிரம் மானியமும், ரூ.11 லட்சம் வங்கி கடனும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான பொருளாதார கடன் உதவி திட்டத்தின் கீழ் 1,181 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 95 லட்சம் மானியமும், ரூ.2 கோடியே 31 லட்சத்து 55 ஆயிரம் வங்கி கடனும், விவசாயத்துக்கான மின் இணைப்பு பெறும் திட்டத்தின் கீழ் 145 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சத்து 90 ஆயிரம் மானியமும், மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதி திட்டத்தின் கீழ் 107 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 82 ஆயிரம் மானியம் ஆக மொத்தம் 2 ஆயிரத்து 584 பயனாளிகளுக்கு ரூ.12 கோடியே 41 லட்சத்து 77 ஆயிரம் மானியமும், ரூ.28 கோடியே 1 லட்சத்து 59 ஆயிரம் வங்கிக்கடனும் வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்