மும்பையில் பரபரப்பை ஏற்படுத்திய பத்திரிகையாளர் சுட்டுக்கொலை வழக்கு: தாதா சோட்டா ராஜன் உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை

மும்பையில் பரபரப்பை ஏற்படுத்திய பத்திரிகையாளர் ஜே டே சுட்டுக்கொலை வழக்கில் தாதா சோட்டா ராஜன் உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2018-05-03 01:22 GMT
மும்பை, 

மும்பையில் குற்ற புலனாய்வு நிருபராக பணியாற்றி வந்தவர் ஜேடே (வயது56).

கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் 11-ந் தேதி மும்பை பவாய் அருகே ஜே டே பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் இவரை மறித்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மும்பை நிழலுலக தாதா சோட்டா ராஜன் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

தாதா சோட்டா ராஜனுக்கு எதிர்மறையான கருத்துகளை அவர் கட்டுரையில் எழுதி வந்தார். குறிப்பாக சோட்டா ராஜனின் உடல் நிலை, சரிந்து வரும் செல்வாக்கு போன்றவைகள் குறித்து எழுதி வந்ததால், இந்த கொலை நடைபெற்று இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். கொலை நடக்கும் போது ஜே டே ஒரு ஆங்கில இதழின் ஆசிரியராக பணியாற்றினார்.

இதையடுத்து மராட்டிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டத்தின் கீழ் சோட்டா ராஜன் உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் ஜே டேயை கொலை செய்ய சோட்டா ராஜனை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்ட மும்பையை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஜிக்னா வோராவும் ஒருவர்.

இந்தோனேசியா நாட்டின் பாலி தீவில் பதுங்கி இருந்த சோட்டா ராஜன் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நாடு கடத்தப்பட்டு இந்தியா கொண்டுவரப்பட்டார். அவர் மீது ஜே டே கொலை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சோட்டா ராஜன் உள்பட 12 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் ஜே டே கொலை வழக்கை மும்பை சிறப்பு கோர்ட்டு நீதிபதி சமீர் அட்கர் விசாரணை நடத்தினார். விசாரணை நிறைவில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது டெல்லி திகார் சிறையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் சோட்டா ராஜன் ஆஜர்படுத்தப்பட்டார்.

காலையில் தீர்ப்பை அறிவித்த நீதிபதி சமீர் அட்கர், தாதா சோட்டா ராஜன் உள்பட 9 பேரை குற்றவாளிகள் என அறிவித்தார்.

மேலும் பால் ஜோசப் மற்றும் பத்திரிகையாளர் ஜிக்னா வோரா ஆகியோருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லையென கூறி அவர்களை இந்த வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதி தீர்ப்பளித்தார். குற்றவாளிகளுள் ஒருவரான வினோத் அஷ்ரானி என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நீதிபதி வழக்கு தொடர்பாக ஏதேனும் தெரிவிக்க விரும்புகிறீர்களா என சோட்டா ராஜனிடம் கேள்வி எழுப்பினார். அவர் அதற்கு ‘எல்லாம் சரி’ என்று மட்டும் பதில் கூறினார்.

இதையடுத்து குற்றவாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை குறித்த வாதம் தொடங்கியது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், ‘கொலை செய்யப்பட்டவர் ஜனநாயகத்தின் நான்காம் தூண் எனப்படும் பத்திரிகை துறையை சேர்ந்தவர். அவர் ஒரு பத்திரிகையாளராக தனது கடமையை செய்ததற்காக சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கிறார். இந்த வழக்கின் தீர்ப்பு பொதுமக்களுக்கு ஒரு செய்தியை தெரிவிப்பதாக இருக்க வேண்டும். இதனால் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ வழங்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டார்.

அதே நேரத்தில் குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சோட்டா ராஜன் உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறினார். மேலும் குற்றவாளிகளுக்கு தலா ரூ.26 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

போலி பாஸ்போர்ட்டு பயன்படுத்திய வழக்கில் கடந்த ஆண்டு டெல்லி கோர்ட்டு சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்