சட்டமேலவையின் 6 இடங்களுக்கு நடக்கும் தேர்தலில் பா.ஜனதாவுடன் சிவசேனா கூட்டணி
சட்டமேலவையின் 6 இடங்களுக்கு நடக்கும் தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து சிவசேனா போட்டியிடுகிறது.
மும்பை,
சிவசேனா மத்திய மற்றும் மாநில பா.ஜனதா கூட்டணி அரசில் அங்கம் வகித்து வருகிறது. கூட்டணியில் இருந்துகொண்டே பா.ஜனதாவின் செயல்பாடுகளை கடுமையாக சாடி வரும் சிவசேனா அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மற்றும் மராட்டிய சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என அறிவித்து இருக்கிறது.
அதே நேரத்தில் வருகிற 21-ந்தேதி மராட்டிய சட்ட மேலவையின் 6 இடங்களுக்கு நடைபெற இருக்கும் தேர்தலில் பா.ஜனதா உடன் கூட்டணி வைத்து போட்டியிட சிவசேனா முடிவு செய்து உள்ளது.
மொத்தம் உள்ள 6 இடங்களில் 50-க்கு 50 என்ற பார்முலா அடிப்படையில் பா.ஜனதா 3 இடங்களிலும், சிவனோ 3 இடங்களிலும் போட்டியிடுகின்றன. நாசிக், ராய்காட்-ரத்னகிரி-சிந்துதுர்க், பர்பானி ஆகிய தொகுதிகளுக்கு சிவசேனா வேட்பாளர்களும், உஸ்மனாபாத்-லாத்தூர்-பீட், அமராவதி, வார்தா-சந்திராப்பூர் ஆகிய தொகுதிகளில் பா.ஜனதா வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். அமராவதி சட்டமேலவை தொகுதிக்கு பா.ஜனதா சார்பில் மந்திரி பிரவின் பாட்டீல் மட்டும் மனுதாக்கல் செய்து உள்ளார்.
சட்டமேலவை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று (வியாழக்கிழமை) கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.