திரு.வி.க.நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.16 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு, மண்டல அதிகாரிகள் அதிரடி

திரு.வி.க.நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்பு குடிசைகளை இடித்து அகற்றி ரூ.16 கோடி மதிப்பிலான நிலத்தை மண்டல அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.

Update: 2018-05-02 22:46 GMT
திரு.வி.க. நகர்,

சென்னை திரு.வி.க. நகர் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள திரு.வி.க.நகர் 22-வது தெருவில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 5.25 கிரவுண்டு நிலம் உள்ளது. 40 வருடங்களுக்கு மேலாக இந்த இடத்தை 5 குடும்பத்தினர் ஆக்கிரமித்து குடிசை அமைத்து வசித்து வந்தனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி மாநகராட்சி திரு.வி.க நகர் மண்டல அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் வழங்கியும் ஆக்கிரமிப்பாளர்கள் இடத்தை காலி செய்யவில்லை. இதையடுத்து மாநகராட்சி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்க உத்தரவிட்டது.

அதைதொடர்ந்து குடிசை போட்டு தங்கி இருந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் மாற்று இடமாக தலா 400 சதுர அடி காலி இடம் வேறு இடத்தில் வழங்கப்பட்டு, அனைவரும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையடுத்து நேற்று காலை திரு.வி.க.நகர் மண்டல அதிகாரி அருணா உத்தரவின்பேரில் செயற்பொறியாளர் செந்தில்நாதன் மேற்பார்வையில் உதவி செயற்பொறியாளர் சரோஜா, உதவி பொறியாளர்கள் சிவப்பிரியா, கோபிநாத் முன்னிலையில் 10-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் அந்த இடத்தில் ஆக்கிரமித்து அமைத்து இருந்த குடிசைகளை இடித்து அகற்றி, மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை மீட்டனர்.

மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.16 கோடி என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் மரம், செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடந்த அந்த இடத்தை பொக்லைன் எந்திரம் கொண்டு சுத்தம் செய்தனர். அப்போது புதருக்குள் இருந்து 30-க்கும் மேற்பட்ட பாம்புகள் சீறிப்பாய்ந்தபடி படையெடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முட்புதர்கள் சுத்தம் செய்யப்பட்ட பிறகு பாதுகாப்புக்காக அந்த இடத்தில் இரும்பு வேலி அமைக்கப்படும். விரைவில் அந்த இடத்தில் மாநகராட்சி பூங்கா அல்லது பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் ஏதாவது ஒன்று அமைத்து கொடுக்கப்படும் என திரு.வி.க.நகர் மண்டல அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்