கோவில்பட்டியில் விவசாய சங்கத்தினர் ரெயில் மறியல் முயற்சி
கோவில்பட்டியில் ரெயில் மறியல் முயற்சியில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர் 232 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவில்பட்டி,
தமிழ் விவசாயிகள் சங்கம் கோவில்பட்டி குழு சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நேற்று காலையில் சங்கத்தின் மாநில தலைவர் நாராயணசாமி தலைமையில் ஏராளமான விவசாயிகள் கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கு திரண்டு வந்தனர்.
இன்சூரன்ஸ் நிறுவனத்தில் விவசாயிகள் செலுத்திய பயிர் காப்பீட்டு தொகையை கால தாமதம் இல்லாமல் விரைவில் வழங்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் ஒரு விவசாயிக்கு அதிகமான தொகையும், ஒரு விவசாயிக்கு குறைவான தொகையும் வழங்கி குளறுபடி செய்வதை நிறுத்த வேண்டும். விவசாயிகளுக்கு ஒரே மாதிரியான நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தது.
தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் ரெயிலை மறிப்பதற்காக கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ், ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அரியநாயகம், பார்த்தசாரதி மற்றும் போலீசார் விவசாயிகளை ரெயில் நிலையத்திற்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். இதில் விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் நடராஜன், மாநில அமைப்பாளர் காளிராஜ், மாநில துணை தலைவர் நம்பிராஜன், மாவட்ட செயலாளர் துரை, துணை செயலாளர் மார்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் போலீசார் ரெயில் மறியல் முயற்சியில் ஈடுபட்டதாக 74 பெண்கள் உள்பட 232 பேரை கைது செய்து கோவில்பட்டி-பசுவந்தனை ரோட்டில் உள்ள அரங்கிற்கு கொண்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.