அசாம் மாநிலத்தில் மாரடைப்பால் உயிரிழப்பு: கோவில்பட்டி எல்லை பாதுகாப்பு படை வீரரின் உடல் தகனம்
அசாம் மாநிலத்தில் மாரடைப்பால் உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படை வீரரின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று கோவில்பட்டி அருகே தகனம் செய்யப்பட்டது.
கோவில்பட்டி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது மந்திதோப்பு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் மகன் முத்துகுமார் (வயது 36).
இவர் அசாமில் இந்திய எல்லை பாதுகாப்பு படையில் காவலராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி அசாமில் பணியில் இருந்த போது மாரடைப்பு காரணமாக முத்துகுமார் உயிரிழந்தார்.
அவரின் உடல் எல்லை பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் நாயர் தலைமையில் விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கு இருந்து நேற்று காலை 9 மணிக்கு கோவில்பட்டி அருகே உள்ள மந்திதோப்பு கிராமத்தில் உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு முத்துகுமாரின் உடல் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.முத்துகுமாரின் உடலுக்கு முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நலச்சங்க தென்மண்டல தலைவர் பால் ரத்தினசாமி தலைமையில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
அதனையடுத்து மந்திதோப்பு மயானத்திற்கு உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அங்கு இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து முத்துகுமாரின் உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள் இறுதி சடங்கு செய்தனர். அதன் பின்னர் அவரது உடல் எரியூட்டப்பட்டது. உயிரிழந்த முத்துகுமாருக்கு அமுதா என்ற மனைவியும், 11 வயதில் அஜய்செல்வன் என்ற மகனும் உள்ளனர்.