வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது கூட்டுறவு சங்க அலுவலகத்திற்குள் புகுந்து சூறையாடிய கும்பல்

வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது கூட்டுறவு சங்க அலுவலகத்திற்குள் புகுந்து சூறையாடிய கும்பலால் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Update: 2018-05-02 23:15 GMT
பல்லடம்,

பல்லடத்தில், வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது கூட்டுறவு சங்க அலுவலகத்திற்குள் புகுந்த ஒரு கும்பல் ரகளையில் ஈடுபட்டதுடன் பொருட்களை சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பல்லடம் பஸ் நிலையம் அருகே பல்லடம் உழவர் பணிக்கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள் தேர்தல் நடத்துவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 30-ந் தேதி தொடங்கியது. இந்த சங்கத்தில் உள்ள 11 உறுப்பினர்கள் பதவிக்கு 62 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று அங்குள்ள ஒரு அறையில் நடைபெற்றது. கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அலுவலக முதுநிலை ஆய்வாளர் கண்ணன் தேர்தல் அதிகாரியாக இருந்து வேட்பு மனுக்களை பரிசீலனை செய்தார்.

அப்போது திடீரென்று ஒரு கும்பல் அந்த அலுவலக அறைக்குள் புகுந்து கண்ணாடிகளை உடைக்கும் சத்தம் கேட்டது. அத்துடன் அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை தூக்கி வீசும் சத்தம் கேட்டது. இதனால் அந்த அலுவலகத்தில் இருந்த பலரும் அதிர்ச்சி அடைந்து அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது தேர்தல் அதிகாரி கண்ணன் அந்த அறையில் இருந்து வேகமாக வெளியே வந்தார். அத்துடன் அறையில் ஆங்காங்கே வேட்பு மனுக்கள் கிழிக்கப்பட்டு சிதறிக்கிடந்தன. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆர்.பழனி விரைந்து வந்து தேர்தல் அதிகாரி கண்ணனிடம் சம்பவம் குறித்து விசாரித்தார். இந்த நிலையில் அங்கு இருந்த தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் அங்கு குவிந்தனர்.

அவர்கள் தேர்தல் அதிகாரி கண்ணன் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆர்.பழனி ஆகியோரை அலுவலகத்தை விட்டு வெளியே வரவிடாமல் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பியபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அவர்களை அழைத்து சென்றனர்.

பின்னர் தேர்தல் அதிகாரி கண்ணன் பல்லடம் போலீசில் இது தொடர்பாக புகார் அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

பல்லடம் உழவர் பணிக்கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனையில் ஈடுபட்டிருந்த போது எனது அறைக்கு அடையாளம் தெரியாத 30 பேர் திடீரென்று வந்தனர். அவர்களில் சிலர் வேட்பு மனுக்கள் பரிசீலனை முறையாக நடக்கிறதா? என்று கேட்டனர். பின்னர் மேஜை மீது இருந்த வேட்பு மனுக்களை கிழித்து எறிந்ததுடன், மேஜை நாற்காலிகளை சூறையாடியதுடன் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் நான் அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டேன். எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.

இதற்கிடையில் கூட்டுறவு சங்க அலுவலக அறிவிப்பு பலகையில் பல்லடம் உழவர் பணிக்கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்த அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது. அத்துடன் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் கையெழுத்து போட்ட ஒரு புகார் மனுவை தி.மு.க. ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பல்லடம் போலீசில் கொடுத்தார்.

அதில், கூட்டுறவு சங்க வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது ராமமூர்த்தி, தங்கவேல், யவனகதிரவன், ஹயாஸ் முகமது, சம்பத் ஆகியோர் உள்பட ஒரு கும்பல் கூட்டுறவு சங்க அலுவலக அறைக்குள் புகுந்து வேட்பு மனுக்களை கிழித்ததுடன், மேஜை, நாற்காலிகளை சூறையாடி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்