கொட்டி தீர்த்த கோடை மழை மரங்கள், டிரான்ஸ்பார்மர்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் சூறாவளிக்காற்றுடன் கொட்டி தீர்த்த கோடைமழையினால் மரங்கள்-டிரான்ஸ்பார்மர்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக சுட்டெரிக்கும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது. வழக்கம் போல, நேற்று காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதிய நேரத்தில் அனல் காற்று வீசியதால், வீடுகளுக்குள்ளேயே மக்கள் முடங்கினர்.
இந்தநிலையில், மாலை நேரத்தில் திடீரென வானத்தில் கார்மேகம் சூழ்ந்தன. இதையடுத்து இரவு 7.30 மணியளவில் திண்டுக்கல்லில் இடி, மின்னலுடன் மழை பெய்யத்தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக ஆங்காங்கே மின்தடையும் ஏற்பட்டதால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.
திண்டுக்கல் சாலை ரோடு, மெயின் ரோடு, ஆர்.எஸ். சாலைகளில் மழைநீர் வெள்ளமாக ஓடியது. இதில் வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன. இந்த திடீர் மழையால் கோடை வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல, ஒட்டன்சத்திரத்தில் இரவு 8.30 மணி அளவில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த காற்றில் ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் அருகே இருந்த 2 டிரான்ஸ்பார்மர்கள் சாய்ந்து விழுந்தன.
ஒட்டன்சத்திரம்- பழனி சாலையில் உள்ள கைராசி நகர் உள்பட 3 இடங்களில் மின்கம்பங்களும் ஒடிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் நகர் முழுவதும் இருளில் மூழ்கியது.
நிலக்கோட்டையில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் நிலக்கோட்டை-மதுரை சாலையோரத்தில் நின்றிருந்த 50 ஆண்டு பழமை வாய்ந்த ஒரு மரம் முறிந்து விழுந்தது. இதேபோல் மின்கம்பம், டிரான்ஸ்பார்மரும் ஒடிந்து விழுந்தன. இதனால் மின்சாரம் தடை ஏற்பட்டதுடன், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல் கொடைரோடு, பள்ளப்பட்டி, அம்மையநாயக்கனூர், சிலுக்குவார்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியிலும் சூறவாளிக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. கொடைரோடு பகுதியில் 15-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரை பறந்தன. மின்கம்பங்களும் சாய்ந்தன. மேலும், கொடைரோடு-நிலக்கோட்டை சாலையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நத்தம், செந்துறை பகுதியில் 2 மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. ஆங்காங்கே கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இருப்பினும் கொட்டி தீர்த்த கோடை மழையினால் மா, தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
குஜிலியம்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சூறாவளி காற்றுடன் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் கடைவீதி, பஸ்நிலையம், மணப்பாறை சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது. இதேபோல் வேடசந்தூர் பகுதியிலும் பலத்த மழை கொட்டியது.
கொடைக்கானலில் மதியம் 1.30 மணி முதல் 2 மணி நேரம் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. சில இடங்களில் ஐஸ் கட்டி மழையும் பெய்தது. மழை காரணமாக அன்னை தெரசா நகர் உள்பட பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்தன. இதனால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. மாவட்டம் முழுவதும் பரவாலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.