போலி ஏ.டி.எம். கார்டு மோசடி விவகாரம்: முக்கிய குற்றவாளி உள்பட 2 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை

புதுவையில் போலி ஏ.டி.எம். கார்டு மோசடி விவகாரத்தில் முக்கிய குற்றவாளி உள்பட 2 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் முக்கிய தகவல் வெளியாகும் எனத்தெரிகிறது.

Update: 2018-05-02 22:30 GMT
புதுச்சேரி,

புதுவையில் ஏராளமானவர்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து அவர்களுக்கு தெரியாமல் பெருமளவு பணம் மோசடி செய்து இருப்பதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. சுனில் குமார் கவுதம் உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் சுவைப்பிங் மெஷினை பயன்படுத்தி அதன் மூலம் போலியாக ஏ.டி.எம். கார்டுகளை தயாரித்து அதன்மூலம் புதுவை, விழுப்புரம், கடலூர், திண்டிவனம் உள்பட பல்வேறு இடங்களில் மற்றவர்களின் கணக்குகளில் இருந்து மோசடியாக லட்சக்கணக்கில் பணத்தை திருடி இருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக லாஸ்பேட்டை லட்சுமிநகர் பாலாஜி (வயது 26), முருங்கப்பாக்கம் சந்துரு (30), கடலூர் காராமணிக்குப்பம் பகுதியை சேர்ந்த கமல் (28), சென்னை கொளத்தூரை சேர்ந்த ஷியாம் (27), அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் டாக்டராக பணியாற்றிய விவேக் என்ற விவேக் ஆனந்தன் (28) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சர்வதேச கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இந்த வழக்கில் புதுவை முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான சந்துருஜி, சிதம்பரம் என்ஜினீயர் ராஜேஷ், கேரளாவை சேர்ந்த ரகீம் என்பவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார் கள். அவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் உள்ள சந்துருஜி வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தி கம்ப்யூட்டர்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான பாலாஜி, சந்துரு ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம், அவர்கள் 2 பேரையும் 2 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் மேலும் முக்கிய தகவல் வெளியாகும் என சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் செய்திகள்