கொடைக்கானலில் சூறாவளி காற்றுடன் 2 மணி நேரம் பலத்த மழை
கொடைக்கானலில் சூறாவளி காற்றுடன் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. மரக்கிளைகள் மின்கம்பிகள் மீது முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கொடைக்கானல்,
கொடைக்கானல் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனிடையே நேற்று காலை கடுமையான வெப்பம் நிலவியது. இதையடுத்து பிற்பகல் 1.30 மணி முதல் 2 மணி நேரம் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. சில இடங்களில் ஐஸ் கட்டி மழையும் பெய்தது. இதில் போட் கிளப்பில் மாலை வரை 30 மி.மீட்டர் அளவில் மழை பதிவானது.
இந்த மழை காரணமாக அன்னை தெரசா நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்தது. இதன்காரணமாக அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. பலத்த மழை காரணமாக கொடைக்கானல் ஏரி நிரம்பி வழியும் தருவாயில் உள்ளது. மேலும் ஏரிச்சாலையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றன.
இதனால் ஏரிச்சாலை வழியாக வாகனங்கள், சைக்கிள்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து நெடுஞ்சாலை உதவி பொறியாளர் செந்தில்குமார் தலைமையில் ஊழியர்கள் சாலையை பெயர்ந்து எடுத்து தண்ணீரை வடிய வைத்தனர்.இந்நிலையில் பலத்த மழை காரணமாக வெள்ளிநீர் வீழ்ச்சி, பாம்பார் நீர் வீழ்ச்சிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. மழையினை தொடர்ந்து கடும் குளிர் நிலவிய போதிலும், சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர்.