மாணவர் சேர்க்கை நிறுத்தம்: நூற்றாண்டு கடந்த ரெயில்வே பள்ளி அடுத்த ஆண்டு மூடப்படுகிறது

மதுரையில் நூற்றாண்டு கடந்த ரெயில்வே பள்ளி அடுத்த ஆண்டுடன் மூடப்படுகிறது. அங்கு மாணவர் சேர்க்கை இந்த கல்வி ஆண்டே நிறுத்தப்பட்டுள்ளது.

Update: 2018-05-02 22:30 GMT
மதுரை,

இந்திய ரெயில்வேயில் ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்களின் குழந்தைகளுக்காக ஆங்கிலோ இந்தியன் ரெயில்வே பாடத்திட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகள் 100 ஆண்டு பழமை வாய்ந்தவை. ஆங்கிலேயர் இந்தியாவை ஆட்சி செய்த போது, அவர்களின் குழந்தைகளுக்காக இந்த ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளை தொடங்கினர்.

இந்த பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்ப்பதற்கு கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்டோர் வரிசைகளில் காத்திருந்த வரலாறும் உண்டு. மதுரையில் உள்ள ரெயில்வே பள்ளி 11.11.1911 அன்று தொடங்கப்பட்டது. முதலில் இந்த பள்ளி விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் செயல்பட்டு வந்தது. பின்னர், ரெயில்வே காலனியில் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. இங்கு தற்போது 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 900 பேர் படித்து வருகின்றனர்.

தமிழகத்தில், சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், போத்தனூர், திருச்சி, சென்னை ரெயில்வே பள்ளிகள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு மாறின. மதுரை கோட்ட ரெயில்வே மேலாளராக இருந்த சுனில்குமார் கர்க் கடந்த 2016-ம் ஆண்டு மதுரை ரெயில்வே பள்ளியை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு மாற்றினார்.

ரெயில்வே துறையை தனியார் மயமாக்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. இதற்கிடையே, 7-வது சம்பள கமிஷன் பரிந்துரையில் உள்ள முரண்பாடுகளை களைய பிபேக் தேப்ராய் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியும், ரெயில்வே தனியார்மயமாக்கலுக்கு பரிந்துரை செய்தது.

அத்துடன், ரெயில்வே ஆஸ்பத்திரி, ரெயில்வே பள்ளிகள் உள்ளிட்டவைகளை ரெயில்வேயின் செலவினமாக அறிவித்தது. அத்துடன், ஆஸ்பத்திரி, பள்ளிகளை மூடுவதற்கும் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரைக்காக, கடந்த 3 வருடங்களாக ரெயில்வே பள்ளிகளின் ஆசிரியர்களின் சம்பளம், பள்ளியின் செலவினம், கல்விக்கட்டணம் ஆகியவற்றை கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வந்தன.

இதில், ரெயில்வே ஊழியர்களின் 2 குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கல்விக்கட்டணமாக வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன், விளையாட்டு சாதனங்களுக்காக ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. ரெயில்வே பள்ளி ஆசிரியர்களுக்கும் குறைந்தபட்ச சம்பளமாக மாதம் ரூ.60 ஆயிரத்துக்கும் மேல் வழங்கப்படுகிறது.

அதாவது, அரசு என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர்களின் சம்பளத்தை விட அதிகளவு ரெயில்வே ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதாகவும் கமிட்டி தெரிவிக்கிறது. மேலும், தென்னக ரெயில்வேயில் ஒரேயொரு ரெயில்வே பள்ளியில் கூட 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில்லை என்றும் கூறப்படுகிறது.

எனவே, ரெயில்வே பள்ளிகளை நிரந்தரமாக மூட முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த கல்வியாண்டில் புதிய மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு (2019) நாடு முழுவதும் உள்ள ரெயில்வே பள்ளிகள் மூடப்படுகின்றன. ரெயில்வே பள்ளிகள் மூடப்படும் என்ற அறிவிப்பு ரெயில்வே ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்களின் குழந்தைகளை சேர்க்க பல இடங்களுக்கும் அலைய வேண்டிய தேவையில்லாமல் இருந்தது. மதுரையை பொறுத்தவரை சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் எண்ணிக்கை குறைவாகும். அதில் இடம்பிடிக்க பலரும் போட்டி போட்டு வரும் நிலையில் அவர்களுடன் ரெயில்வே ஊழியர்களும் தங்களது குழந்தைகளுக்கு இடம்பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.

அதற்கு பதிலாக, ரெயில்வே பள்ளிகளை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுடன் இணைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், ரெயில்வே பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படாது.

மேலும் செய்திகள்