தங்கை கொலை வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் மேலூர் கோர்ட்டில் சரண்

மேலூர் அருகே சொத்து பிரச்சினையால் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது அண்ணனான பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேலூர் கோர்ட்டில் சரணடைந்தார் .;

Update:2018-05-03 03:45 IST
மேலூர்,

மேலூர் அருகே டி.வெள்ளாளபட்டியை அடுத்துள்ளது வலையங்குளம். இங்கு வசித்தவர் விதவை பெண் பஞ்சவர்ணம் (வயது 55 ). இவரது அண்ணன் உலகநாதன். மதுரை திலகர் திடலில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தார். இவர்கள் இருவருக்குமிடையே சொத்து பிரச்சினையால் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி இரவில் வீட்டில் தூங்கிய பஞ்சவர்ணம் மற்றும் அவரது மகள் சுகன்யா (21 ) ஆகிய இருவரையும் ஒரு கும்பல் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டது. இதில் படுகாயம் அடைந்த இருவரில் பஞ்சவர்ணம் இறந்து போனார். சுகன்யா மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைபெற்று உயிர் பிழைத்தார். இந்த கொலை தொடர்பாக சப்- இன்ஸ்பெக்டர் உலகநாதன், அவரது மகன் உள்ளிட்டோர் மீது மேலூர் போலீசார் வழக்கு பதிவுசெய்தனர்.

இதனை தொடர்ந்து உலகநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானார். அவரது மகனும் நண்பர்கள் 2 பேரும் அப்போதே கைதாகினர். உலகநாதனை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மேலூர் கோர்ட்டில் உலகநாதன் சரணடைந்தார். 

மேலும் செய்திகள்