கன்டோன்மெண்ட் ஊழியர்களை மத்திய அரசு ஊழியர்களாக தரம் உயர்த்த வேண்டும், பாராளுமன்ற பாதுகாப்பு அமைச்சக நிலைக்குழு உறுப்பினரிடம் மனு

கன்டோன்மெண்ட் ஊழியர்களை மத்திய அரசு ஊழியர்களாக தரம் உயர்த்த வேண்டும் என்று பாராளுமன்ற பாதுகாப்பு அமைச்சக நிலைக்குழு உறுப்பினரிடம் மனு அளிக்கப் பட்டது.

Update: 2018-05-02 22:15 GMT
குன்னூர்,

குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் கன்டோன்மெண்ட் போர்டு நிர்வாகம் இயங்கி வருகிறது. மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இந்த போர்டு செயல்பட்டு வருகிறது. கன்டோன்மெண்ட் போர்டில் உள்ள அலுவலக பிரிவு, பொறியியல் பிரிவு, சுகாதார பிரிவு, ஆஸ்பத்திரி பிரிவு, கல்வி பிரிவு ஆகிய துறைகளில் 180-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கன்டோன்மெண்ட் போர்டு ஊழியர்களை மத்திய அரசு ஊழியர்களாக தரம் உயர்த்த வேண்டும் என்றும், மத்திய அரசு ஊழியர்களுக்கான பணப்பலன்களை வழங்கிட வேண்டும் என்றும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட கன்டோன்மெண்ட் ஊழியர் சங்க தலைவர் அசோகன், துணைத்தலைவர் பரமேஸ்வரன், நிர்வாகிகள் நாகராஜ், ராஜ்குமார், ராம்குமார், சுந்தரம், சின்னான் ஆகியோர் பாராளுமன்ற பாதுகாப்பு அமைச்சக நிலைக்குழு உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூனனிடம் மனு ஒன்றை கொடுத்தனர். இதுகுறித்து சங்க தலைவர் அசோகன், செயலாளர் கணேசன் ஆகியோர் கூறிய தாவது:-

வெலிங்டன் கன்டோன்மெண்ட் நிர்வாகம் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இருந்தாலும் வாரியமாக செயல்படுகிறது. மத்திய அரசின் சட்டத்திட்டங்கள் இருந்தாலும், ஊழியர்களுக்கு மாநில அரசின் சம்பளம் மற்றும் சலுகைதான் கிடைக்கிறது. இதனால் ஊழியர்கள் மத்திய அரசு பணப்பலன்கள் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே கன்டோன்மெண்ட் போர்டு அனைத்து துறை ஊழியர்களையும் மத்திய அரசு ஊழியர்களாக தரம் உயர்த்த வேண்டும். மத்திய அரசின் பணப்பலன்களை வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு குடியிருப்புகளை கட்டி கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாராளுமன்ற பாதுகாப்பு அமைச்சக நிலைக்குழு உறுப்பினரிடம் மனு கொடுத்து உள்ளோம்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட அவர் இது குறித்து பாராளுமன்றத்தில் பேசுவதாக கூறினார்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்