முதுமலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் கவிழ்ந்தது; 20 பேர் காயம்

முதுமலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கர்நாடகா அரசு பஸ் சாலையில் கவிழ்ந்தது. இதில் 20 பயணிகள் காயம் அடைந்தனர்.;

Update: 2018-05-02 22:15 GMT
கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து முதுமலை வழியாக மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட கார்குடி வனத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டு உள்ளது. மழை பெய்யும் சமயத்தில் இச்சாலையில் வாகனங்கள் செல்லும் போது விபத்துகள் ஏற்படுகிறது. இன்டர்லாக் கற்கள் பதித்த சாலையில் வாகனங்களின் டயர்கள் வழுக்கி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனமுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கூடலூர், முதுமலை பகுதியில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இந்தசமயத்தில் ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக மைசூருக்கு கர்நாடகா அரசு பஸ் நள்ளிரவு 12 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் 45 பயணிகள் அமர்ந்து இருந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் தூங்கி கொண்டிருந்தனர்.

முதுமலை கார்குடி வனத்தில் இன்டர்லாக் கற்கள் பதித்த சாலையில் கர்நாடகா பஸ் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றது. பின்னர் சாலையோரம் இருந்த இரும்பு தடுப்புகளை உடைத்து கொண்டு சாலையில் கவிழ்ந்தது. இதில், 20 பயணிகள் காயம் அடைந்தனர். இதையடுத்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு குண்டல்பேட் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அனைவரும் அங்கிருந்து தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மசினகுடி போலீசார், முதுமலை வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அந்த பஸ்சை மீட்கும் பணியை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

மேலும் செய்திகள்