திற்பரப்பு அருவிக்கு வருபவர்களிடம் முறைகேடாக பணம் வசூலிப்பு கட்டண வசூல் அறைக்கு ‘சீல்’

திற்பரப்பு அருவிக்கு வருபவர்களிடம் முறைகேடாக பணம் வசூலிப்பதாக வந்த புகாரின் பேரில், கட்டண வசூல் அறைக்கு ‘சீல்‘ வைத்து அதிகாரி நடவடிக்கை எடுத்தார்.

Update: 2018-05-02 23:00 GMT
குலசேகரம்,

குமரி மாவட்டம் சிறப்பு பெற்ற கோவில்களும், சுற்றுலா தலங்களும் நிறைந்த மாவட்டமாகும். இதனால் இங்கு ஆண்டு முழுவதும் உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள கோவில்கள், சுற்றுலா தலங்களுக்கு பயணிகள் ஏராளமானவர்கள் வருகிறார்கள்.

அதிலும் அவர்கள் குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவிக்கு பெருமளவில் வருகிறார்கள். அவர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அருவியில் குளித்து மகிழ்கிறார்கள். மேலும், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியின் மேல் பகுதியில் உள்ள நீர் தேக்கத்தில் படகு சவாரி செய்து செல்கின்றனர்.

இதற்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் திற்பரப்பு பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு திற்பரப்பு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதற்கு ஏலம் விடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு கட்டணமாக ரூ.5, கேமரா ரூ.10, வீடியோ கேமரா ரூ.125 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு குத்தகைக்கு எடுத்தவர் திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகத்திற்கு பணம் பாக்கி வைத்துள்ளதாகவும் மேலும், சுற்றுலா பயணிகளுக்கு கொடுக்கப்படும் கட்டண ரசீதில் தொடர் எண் இல்லாமலும், முறையான அலுவலக முத்திரை இல்லாமலும் வினியோகிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதேபோல் கேமரா, வீடியோ கேமராக்களுக்கும் அதிகமாக கட்டணம் வசூலித்து முறைகேடு நடந்ததாக பேரூராட்சி அலுவலகத்திற்கு புகார்கள் வந்தன.

இந்தநிலையில் நேற்று காலை 9 மணியளவில் திற்பரப்பு பேரூராட்சி செயல் அலுவலர் ரமாதேவி தலைமையில் அலுவலர்கள் தீடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, திற்பரப்பு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் கட்டண ரசீதில் வரிசை எண் இல்லாமல் இருந்ததும், முறைகேடாக பணம் வசூலித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து காலை 11 மணியளவில் பேரூராட்சி செயல் அலுவலர் அருவியின் நுழைவுவாயிலையும், கட்டண வசூல் அறையையும் பூட்டி சீல் வைத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கோடைகால விடுமுறையையொட்டி அருவிக்கு உள்ளூர் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்திருந்தனர். இந்த திடீர் நடவடிக்கையால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதைக்கண்ட பேரூராட்சி செயல் அலுவலர் ரமாதேவி, அவர்களின் ஏமாற்றத்தை தவிர்க்கும் விதமாக நேற்று மாலை 6 மணி வரை இலவசமாக சுற்றுலா பயணிகள் சென்று குளித்து வர அனுமதி வழங்கினார்.

மேலும், நாளை முதல் பேரூராட்சி ஊழியர்கள் சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பார்கள் என்று கூறினார். இதைகேட்ட சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதைதொடர்ந்து சுற்றுலா பயணிகள் நேற்று இலவசமாக சென்று அருவியில் குளித்து மகிழ்ந்தனர். 

மேலும் செய்திகள்