ரூ.5 லட்சத்தை திருப்பி தராததால் என்ஜினீயரிங் கம்பெனி உரிமையாளர் காரில் கடத்தல் 3 பேர் கைது

ரூ.5 லட்சத்தை திருப்பி தராததால் என்ஜினீயரிங் கம்பெனி உரிமையாளரை காரில் கடத்திய கேரளாவை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-05-02 23:00 GMT
திருவெறும்பூர்,

திருச்சி பழைய பால்பண்ணையை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சுப்பிரமணியன் என்கிற ஜெகன்(வயது 22). இவர் அப்பகுதியில் என்ஜினீயரிங் கம்பெனி வைத்துள்ளார். கேரளாவை சேர்ந்த ஆலுாப் என்பவர் ஸ்டீல் ராக் செய்வதற்காக ஜெகனுக்கு ரூ.11 லட்சத்திற்கு ஆர்டர் கொடுத்திருந்தார். அதற்கு முன்பணமாக ரூ.5 லட்சம் செலுத்தினார்.

ஆனால், குறித்த நேரத்தில் ஜெகன் ஸ்டீல் ராக் செய்து கொடுக்கவில்லை என்ற கூறப்படுகிறது. இதனால், ஜெகனிடம் கொடுத்த பணத்தை ஆலுாப் திரும்ப கேட்டார். அதற்கு ஜெகன், உங்களுக்கு உரிய ஆர்டரை விரைவில் செய்து கொடுத்து விடுவேன், பணத்தை திரும்ப தர முடியாது என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ஆலுாப், தனது நண்பர்களான சுதர்சன், கார் டிரைவர் சுதேஷ் ஆகியோருடன் கடந்த 30-ந் தேதி கம்பெனியில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக வெளியே வந்த ஜெகனை காரில் கடத்தி சென்று விட்டனர்.

இச்சம்பவம் குறித்து ஜெகனின் சகோதரி ஷாலினி(30) திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜெகனை கேரளாவிற்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.

அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மதன் தலைமையில் தனிப்படை போலீசார் கேரளா விரைந்து சென்றனர். அங்கு திருவல்லம் பகுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஜெகனை மீட்டதோடு அவரை கடத்திய ஆலுாப், சுதர்சன், சுதேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து திருவெறும்பூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்