தேனி கனரா வங்கியில் ரூ.1 கோடி மோசடி
தேனி கனரா வங்கி கிளையில் சுமார் ரூ.1 கோடி அளவில் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.;
தேனி,
தேனி நகர் மதுரை சாலையில் கனரா வங்கி கிளை உள்ளது. இந்த வங்கியில் சில நாட்களாக வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை திருப்ப முடியாமல் அலைக்கழிக்கப்பட்டனர். சில வாடிக்கையாளர்கள் நகைகளை திருப்ப வந்த போது, அடகு வைத்த நகைகளுக்கு பதில் வேறு நகைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை வாடிக்கையாளர்கள் வாங்க மறுத்து, வங்கி மேலாளரிடம் புகார் செய்தனர்.
இந்த நிலையில் வங்கியில், மதுரை மண்டல அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் அடகு வைக்கப்பட்ட நகைகளை தணிக்கை செய்தனர். அப்போது நகைகள் அடகு வைத்ததில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான மோசடி நடந்துள்ளது தெரியவந்தது. அதில் நகைகளை கையாடல் செய்தல், வாடிக்கையாளர்கள் பெயரில் போலி நகைகள் அடகு வைத்தல் போன்ற மோசடி சம்பவங்கள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து வங்கியின் முதன்மை மேலாளர் சுப்பையா தலைமையில், வங்கி அதிகாரிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனை சந்தித்து நேற்று முன்தினம் புகார் செய்தனர். இந்த புகார் குறித்து விசாரணை நடத்த, மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிமளாதேவி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
வங்கி முதன்மை மேலாளர் சுப்பையா கொடுத்த புகாரில், ‘வங்கியின் நகை மதிப்பீட்டாளர் செந்தில், அவருடைய உதவியாளர் வினோத் ஆகிய 2 பேரும் சேர்ந்து, வங்கியில் பொதுமக்கள் அடகு வைத்த நகைகளின் கடன் தொகையை மாற்றி பூர்த்தி செய்தும், போலி நகைகளை வாடிக்கையாளர்களின் பெயரில் அடகு வைத்தும் ரூ.98 லட்சத்து 12 ஆயிரம் மோசடி செய்துள்ளனர்’ என்று கூறியிருந்தார்.
இந்த புகார் தொடர்பாக நகை மதிப்பீட்டாளரான தேனி பங்களாமேடு 2-வது தெருவை சேர்ந்த வெங்கடகுருமூர்த்தி மகன் செந்தில் (வயது 40), உதவியாளரான தேனியை சேர்ந்த வினோத் ஆகிய 2 பேர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் வழக்குப்பதிவு செய்துள்ளார். வழக்கில் தொடர்புடைய செந்தில், வினோத் இருவரும் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களை வலைவீசி தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தகவல் அறிந்ததும் வங்கியில் நேற்று வாடிக்கையாளர்கள் பலர் சென்று நகைகளை திருப்ப முயன்றனர். ஆனால், நகைகள் திருப்பிக் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. சில வாடிக்கையாளர்கள் தங்களின் நகைகளை பார்க்க அனுமதிக்குமாறு வங்கி ஊழியர்களிடம் முறையிட்டனர். இதனால், வங்கி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.