ஆன்லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் கலெக்டர் பிரபாகர் தகவல்

ஆன்லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் வசதிக்காக 2 உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் எஸ்.பிரபாகர் தெரிவித்தார்.

Update: 2018-05-02 23:45 GMT
ஈரோடு,

என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக நடக்கும் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு குறித்த ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

2018-2019-ம் ஆண்டுக்கான அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் நீண்டதூரம் பயணம் செய்வதில் உள்ள சிரமம் தவிர்க்கப்படுகிறது. மாணவர்கள் தங்களது பகுதியில் இருந்தே கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

இந்த கலந்தாய்வு 3 கட்டங்களாக நடைபெறும். இதில் முதல் கட்டமாக மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வருகிற 3-ந் தேதி (அதாவது இன்று) தொடங்கி 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் வீட்டில் இருந்தோ அல்லது அரசால் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களிலோ விண்ணப்பிக்க வேண்டும்.

2-வது கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும். மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள உதவி மையத்திற்கு சென்று சான்றிதழ்களை சரிபார்த்துக்கொள்ளலாம். 3-வது கட்டமாக மாணவர்கள் தங்களது விருப்பக்கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை முன்னுரிமை அடிப்படையில் பதிவிடவேண்டும்.

அண்ணா பல்கலைக்கழக அறிவிப்பில் வெளியிட்டுள்ள இணையதளத்தில் கல்லூரிகளின் தர வரிசை பட்டியல் மற்றும் கடந்த ஆண்டுக்கான கலந்தாய்வில் மாணவர்களின் தரவரிசை, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரி மற்றும் பாடப்பிரிவு விவரங்கள் வெளியிடப்படும். மாணவர்களின் விருப்பக்கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகள் அவர்களின் தரவரிசைப்படி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

என்ஜினீயரிங் சேர்க்கைக்கு விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.500, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.250 ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும். என்ஜினீயரிங் கலந்தாய்வுக்காக உதவி மையத்திற்கு செல்லும் மாணவர்கள் 12-ம் வகுப்பு தேர்வு நுழைவுச்சீட்டு, சாதி சான்றிதழ், இருப்பிட முகவரி, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஏ.டி.எம்.கார்டு, கிரெடிட் கார்டு அல்லது வங்கியின் இணையதள சேவைக்கான தகவல்கள் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை ரொக்கமாக செலுத்த முடியாது.

கலந்தாய்வில் பங்கேற்கும் கிராமப்புற மாணவர்களில் கணினி, ஆன்லைன் வசதி இல்லாதவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் சித்தோட்டில் உள்ள சாலை மற்றும் போக்குவரத்து என்ஜினீயரிங் கல்லூரி, பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றில் 2 உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறினார்.

மேலும் செய்திகள்