தேர்தல் அதிகாரியை கண்டித்து போராட்டம்
கடலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேர்தல் அதிகாரியை கண்டித்து கூட்டுறவு வங்கியை அரசியல் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்,
விருத்தாசலத்தில் நகர கூட்டுறவு வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியில் 11 இயக்குனர்களுக்கான தேர்தலுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேட்பு மனுதாக்கல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க., தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 49 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். தொடர்ந்து நேற்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. ஆனால் வேட்பு மனுக்களை பரிசீலனை செய்ய தேர்தல் அதிகாரி வரவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.வினர் நகர செயலாளர் தண்டபாணி தலைமையில் நகர கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர். இதையடுத்து தி.மு.க.வினர் விருத்தாசலம்-ஜங்ஷன் சாலையில் உள்ள மாவட்ட கூட்டுறவு சரக துணை பதிவாளர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி, துணை பதிவாளர் அலுவலகத்தில் இருந்த அலுவலர்களை சந்தித்து புகார் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.
இதற்கிடையே அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர் அபுல்கலாம் ஆசாத், முன்னாள் நகர கூட்டுறவு வங்கி தலைவர் நடிகர் காமராஜ், மாவட்ட பாசறை செயலாளர் ரத்தினராஜன், பொதுக்குழுவை சேர்ந்த நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகளும், தேர்தலை முறையாக நடத்த கோரியும், தேர்தல் அதிகாரி வராததை கண்டித்தும் நகர கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் துணை பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் சிறிதுநேரம் கழித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பெண்ணாடம் அடுத்த வடகரை கூட்டுறவு கடன் சங்க தலைவர் மற்றும் இயக்குனர்களுக்கான தேர்தலுக்காக 38 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் நேற்று வேட்பு மனுக்களை பரிசீலனை செய்ய தேர்தல் அதிகாரி வரவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த வேட்பு மனுதாக்கல் செய்தவர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த பெண்ணாடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
கடலூர்முதுநகர் அருகே வழிசோதனைபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடந்த 30-ந் தேதி 11 இயக்குனர்கள் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 43 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று வேட்பு மனு தாக்கல் பரிசீலனை நடந்தது. ஆனால் தகுதிவாய்ந்த வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு பலகையில் ஒட்டவில்லை. இது குறித்து தி.மு.க. ஒன்றிய செயலாளர் காசிராஜன் தலைமையிலான அக்கட்சியினர் தேர்தல் அதிகாரி சுந்தரவடிவேலுவிடம் கேட்டனர். அதற்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.வினர் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு, தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தி.மு.க.வினரை சமாதானப்படுத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும், தேர்தல் அதிகாரியை போலீசார் பாதுகாப்பாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
புதுப்பேட்டை அருகே உள்ள வீரப்பெருமாநல்லூர் கூட்டுறவு வங்கியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனைத்து கட்சியினர் சார்பில் கூட்டுறவு சங்க நிர்வாக குழு உறுப்பினர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நடந்தது. இந்த நிலையில் வேட்பு மனுதாக்கல் பரிசீலனை ஒருதலைபட்சமாக நடைபெறுவதாக கூறி நேற்று தி.மு.க, கம்யூனிஸ்டு கட்சியினர் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க. ஊராட்சி பிரதிநிதி வெங்கடேசன், ஊராட்சி செயலாளர் மாசிலாமணி, முன்னாள் மாவட்ட பிரதிநிதி பழனி, கிளை செயலாளர் சுப்பிரமணி, இந்திய கம்யூனிஸ்டு ஒன்றியக்குழு வேலாயுதம், துரைக்கண்ணு ஆகியோர் தேர்தல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தேர்தலை நியாயமான முறையில் நடத்தவேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். அப்போது ஆவேசம் அடைந்து தேர்தல் அலுவலர் மற்றும் பணியாளர்களை கூட்டுறவு வங்கிக்குள் வைத்து கதவுக்கு பூட்டுப்போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கூட்டத்தை கலைத்தனர். பின்னர், வங்கியின் பூட்டை போலீசார் திறந்துவிட்டனர்.
திட்டக்குடி அடுத்த தொளாரில் உள்ள தொடக்க வேளாண்மை வங்கி இயக்குனர்கள் தேர்தலுக்காக 61 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் வேட்பு மனுக்களை பரிசீலனை செய்வதற்காக தேர்தல் அதிகாரி வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அரசியல் கட்சியினர், தேர்தலை முறையாக நடத்த கோரியும், தேர்தல் அதிகாரி வராததை கண்டித்தும் கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் வங்கி செயலாளர் செல்வராசு, உதவியாளர் முருகானந்தம் ஆகியோரை வெளியே அனுப்பி வங்கியை பூட்டு போட்டு பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க.வை சேர்ந்த ராஜேந்திரன், ஜெயராமன், கூடலூர் ஜெயராமன், ராமசாமி, பா.ம.க.வை சேர்ந்த பரமசிவம், அறிவழகன், சின்னதம்பி, காங்கிரசை சேர்ந்த பூமாலை, புத்தேரி ஜெயராமன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த சங்கர் கரிகாலன், மணிகண்டன், தனவேல், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சபாபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த செல்வராசு, ஜீவானந்தம், தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த பாரதி, மணிகண்டன், மகாராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த செல்வக்குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தாங்களாகவே கலைந்து சென்றனர்.