குடிநீர் வினியோகம் செய்ய கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
விருத்தாசலம் அருகே குடிநீர் வினியோகம் செய்ய கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே உள்ள தொட்டிக்குப்பம் கிராமத்தில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக அதே பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, 5 மின் மோட்டார்கள் மூலம் 5 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, பொதுக்குழாய் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த 9 மினி குடிநீர் தொட்டிகளில் 4 மினி குடிநீர் தொட்டிகளை ஊராட்சி நிர்வாகம் முறையாக இயக்கவில்லை என தெரிகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் கிராம மக்கள் குடிநீருக்காக அருகில் உள்ள விளை நிலங்களுக்கும், கிராம பகுதிகளுக்கும் செல்லும் போது இருகிராம மக்களிடையே பிரச்சினை ஏற்படும் நிலை உள்ளது.
இந்த நிலையில் தொட்டிக்குப்பம் கிராம மக்கள் நேற்று காலை பா.ம.க. ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமையில் காலி குடங்களுடன் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் தொட்டிக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் விருத்தாசலம்- சிறுவம்பார் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கள் பகுதிக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய கோரியும், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கை கண்டித்தும், செயல்படாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மங்கலம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசார், இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் விருத்தாசலம்- சிறுவம்பார் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.