தனியார் கல்லூரி மேலாளர் வீட்டில் ரூ.3 லட்சம் நகை திருட்டு
திருவண்ணாமலையில் தனியார் கல்லூரி மேலாளர் வீட்டின் கதவை உடைத்து புகுந்த மர்மநபர்கள் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிக்கொண்டு தப்பியுள்ளனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அண்ணாநகர் 6-வது தெருவை சேர்ந்தவர் வஜ்ரவேலு (வயது 68). தனியார் கல்வியியல் கல்லூரியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது குடும்பத்துடன் வில்வாரணியில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு சென்றிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்றபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க சங்கிலி, மோதிரம் உள்பட 9 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தனர்.
இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டின் கதவு மற்றும் பீரோவில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் விரல் ரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
திருடப்பட்ட நகை, வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். எனவே இதுபோன்ற திருட்டுகளை தடுக்க இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.