சித்திரை திருவிழா: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்

சித்திரை திருவிழாவையொட்டி கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. அரவாண் களப்பலிக்கு பின்னர் திருநங்கைகள் தாலியை அறுத்து விதவைக்கோலம் பூண்டனர்.

Update: 2018-05-02 23:30 GMT
உளுந்தூர்பேட்டை, 

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 17-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் தாலிகட்டி கொள்ளும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள், கூத்தாண்டவரை தங்கள் கணவராக ஏற்றுக்கொண்டு கோவில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்டனர். தொடர்ந்து அரவாணுக்கு மனைவிகள் ஆகிவிட்டோம் என்கிற மகிழ்ச்சியில் இரவு முழுவதும் கூட்டம், கூட்டமாக கும்மியடித்து ஆடிப்பாடி அவர்கள் மகிழ்ந்தனர்.

விழாவில் 16-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணியளவில் கோவிலில் உள்ள அரவாண் சிரசுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அரவாண் சிரசு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தேரில் வைக்கப்பட்டது. தொடர்ந்து அரவாண் புஜங்கள், விண்குடை, பாதம், கைகள், மார்பு புஜங்கள், கயிறு, கடையாணி ஆகியவை பல்வேறு கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு அரவாண் திருஉருவம் அமைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. இந்த தேரை குமரகுரு எம்.எல்.ஏ. வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து திரளான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். இந்த தேர் கோவிலை சுற்றியுள்ள 4 மாட வீதிகள் வழியாக பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி, அசைந்தபடி வந்தது. தேர் செல்லும் வீதிகள்தோறும் திருநங்கைகளும், பக்தர்களும் ஆங்காங்கே கற்பூரங்களை ஏற்றிவைத்து வணங்கினர்.

பின்னர் பெரியசெவலை சாலையில் உள்ள அழிகளம் நோக்கி தேர் புறப்பட்டது. அதுவரை புதுமண பெண்கள் போல் தங்களை ஆடை, அணிகலன்களால் அலங்கரித்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருந்த திருநங்கைகள் சோகமயமாகினர். பலர் ஒப்பாரி வைத்து கதறி அழுத படியே தேரை பின்தொடர்ந்து சென்றார்கள்.

மதியம் 1 மணியளவில் அழிகளம் எனப்படும் நத்தம் கிராம பந்தலை தேர் சென்றடைந்தது. அங்கு அரவாண் களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திருநங்கைகள் தங்கள் தலையில் சூடியிருந்த பூக்களை பிய்த்து எறிந்து, நெற்றியில் உள்ள குங்குமப்பொட்டை அழித்தனர். தொடர்ந்து பூசாரிகள், திருநங்கைகள் கையிலிருக்கும் வளையல்களை உடைத்து, கழுத்தில் அணிந்திருந்த தாலியை அறுத்தெறிந்தார்கள்.

இதில் தங்கத்தாலியை அணிந்திருந்த திருநங்கைகள் சிலர், அந்த தாலிகளை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தும் வகையில் அதை கோவில் செயல் அலுவலரிடம் கொடுத்து உரிய ரசீதை பெற்றனர்.

அதன் பிறகு திருநங்கைகள் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று குளித்து தலை மூழ்கி வெள்ளை சேலை அணிந்து விதவைக் கோலம் பூண்டு சோகமாக அவரவர் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றனர்.

விழாவின் 17-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று (வியாழக்கிழமை ) விடையாற்றி உற்சவமும், 18-ம் நாள் நிகழ்ச்சியாக நாளை (வெள்ளிக்கிழமை) தர்மர் பட்டாபிஷேகமும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகளோடு இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

மேலும் செய்திகள்