மின்னல் தாக்கி சிறுவன் உள்பட 2 பேர் பலி
உளுந்தூர்பேட்டை அருகே மின்னல் தாக்கி சிறுவன் உள்பட 2 பேர் பலியானார்கள்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எம்.குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மனைவி சகுந்தலா(வயது 50). இவரது வீட்டுக்கு அருகிலேயே விவசாய நிலம் உள்ளது. இதில் பயிர் செய்திருந்த எள் பயிரை அறுவடை செய்து நிலத்தில் உலர வைத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை உளுந்தூர்பேட்டை பகுதியில் திடீரென இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இந்நிலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சகுந்தலா, அறுவடை செய்த எள்ளை மழையில் நனையாமல் பாதுகாப்பாக எடுத்து வைக்க தனது நிலத்துக்கு சென்றார். அப்போது அவர் தன்னுடன் உதவிக்காக அருகில் வசித்து வரும் சுப்புராயன் மகன் இளவரசனையும்(15) அழைத்து சென்றார்.
அப்போது இவர்களை மின்னல் தாக்கியது. இதில் உடல் கருகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். வீட்டை விட்டு சென்று நீண்ட நேரமாகியும் சகுந்தலா, இளவரசன் ஆகியோர் மீண்டும் வீட்டுக்கு வராததால், அவர்களது குடும்பத்தினர் நிலத்துக்கு சென்று அவர்களை தேடினர். அப்போது அங்கு இருவரும் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.