ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியதாக சுங்கத்துறை துணை கமிஷனர்கள் 4 பேர் அதிரடி கைது

இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விடுவிக்க ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய சுங்கத்துறை துணை கமிஷனர்கள் 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.;

Update: 2018-05-02 00:19 GMT
மும்பை,

மும்பையில் சுங்கத் துறையில் துணை கமிஷனர் களாக பணிபுரியும் அதிகாரிகள் மகேஷ் மீனா, ராஜீவ் குமார் சிங், சந்தீப் யாதவ் மற்றும் சுதர்சன் மீனா.

இவர்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விடுவிக்க அதன் உரிமை யாளரிடம் ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதில் முதல் தவணையாக ரூ. 5 லட்சம் தருமாறு கேட்டனர்.

இதுகுறித்து சரக்கு உரிமையாளர் சி.பி.ஐ. போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் 4 துணை கமிஷனர்களையும் கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று முதல் தவணையாக ரூ. 5 லட்சத்தை சரக்கு உரிமையாளரிடம் இருந்து மேற்கண்ட துணை கமிஷனர்களில் ஒருவர் லஞ்சமாக பெற்றார். அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்த சி.பி.ஐ. போலீசார், அவர் கொடுத்த தகவலின் பேரில், உடந்தையாக இருந்த மற்ற 3 துணை கமிஷனர்களையும் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களாக கருதப்படும் சுங்கத்துறை சூப்பிரண்டு மனிஷ் சிங் மற்றும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த நிலேஷ் சிங் ஆகியோரையும் பிடித்து சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பிடிபட்ட சுங்கத்துறை துணை கமிஷனர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். 

மேலும் செய்திகள்